வேள்விப் படலம் - 447

bookmark

447.

‘’வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்.
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.
 
வெள்ளியை  ஆதல் விளம்பினை- நீ  வெள்ளறிவுடையனாதலின்.
உன்  இயற்கைக்கேற்ப   சொல்லினை;  மேலோர் - மேன்மைக் குணம்
உடைய   பெரியோர்கள்;   வள்ளியர்   ஆக   -  தாம்  வள்ளமை
உடையோராயின்;   இன்  உயிரேனும்  -  தமது  இனிய  உயிரையே
என்றாலும்;  வழங்குவர்  அல்லால் - கொள்வோர்க்குக் ?கொடுப்பாரே
அல்லாமல்; எள்ளுவ என்சில- சில கூறி பரிகசிப்பரோ?; கொள்ளுதல்
தீது  கொடுப்பது   நன்று   -   பிறர்பால்   ஏற்றல்  தீமை  ஈதலே
நன்மையாகும்.

வெள்ளியை:   பெயருக்கேற்ப.      வெள்ளறிவுடையவன்   என்று
நயம்படக் கூறினார். வள்ளியர்: வள்ளன்மை  உடையோர். கொள்ளுதல்
தீது  கொடுப்பது  நன்று  ‘நல்லாறெனினும்’   கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும்  ஈதலே  நன்று’’  என்ற  திருக்குறள் கருத்து  அமைந்த
பாட்டிது. ‘எள்ளுவ என் இதில் ‘என்’வினாப்  பொருட்டு.  விளம்பினை:
முன்னிலை  வினைமுற்று.  ஆல்: அசை.                       28