வேள்விப் படலம் - 438
தேவர்முறையீடும் திருமால் அருளுதலும்
438.
‘ஆயது அறிந்தனர் வானவர். அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
‘’தீயவன் வெந் தொழில் தீர்’’ என நின்றார்;
நாயகனும். அது செய்ய நயந்தான்.
வானவர் ஆயது அறிந்தனர் - தேவர்கள் மாவலியின் அந்தச்
செய்தியைத் தெரிந்தனர்; அந்நாள் மாயனை வந்து வணங்கி நின்றார்
- அப்போது திருமாலை வந்து வணங்கி நின்றனர்; தீயவன்
வெந்தொழில் தீர் என இரந்தார் - கொடியவனான மாவலியினது
கொடுந் தொழிலைத் தீர்ப்பாய் எனக் கெஞ்சிக் கேட்டனர்; நாயகனும்
அது செய்ய நயந்தான் - தலைவனாகிய திருமாலும் அக்காரியத்தைச்
செய்ய ஒருப்பட்டான்.
ஆய+அது: ஆயது; அகரம் தொக்கது. அறிந்தனர்: முற்றெச்சம்.
மாயன்: மாயச் செயல்களில் வல்லவன். இரத்தல்: குறை வேண்டல்.
வெந்தொழில்: கொடுந்தொழில் (பண்புத் தொகை). நாயகன்: உலகத்
தலைவன். நயத்தல்: சொல்லத் தொடங்குதல்
மாவலியின் அச்செயலறிந்த வானவர் திருமாலிடம் வந்து வணங்கி.
இத்தீயவனது கொடுந் தொழிலைத் தீர்க்க வேண்ட மாயவனும் அதைச்
செய்ய ஒருப்பட்டான் என்க. 19
