வேள்விப் படலம் - 432

bookmark

இரிசிகன் பிரமனுலகிற் புகுதல்

432.

காதலன் சேணின் நீங்க.
   கவுசிகை தரிக்கலாற்றாள்.
மீது உறப் படரலுற்றாள்.
   விழு நதி வடிவம் ஆகி.
மாதவர்க்கு அரசு நோக்கி.
   ‘’மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக. நதியாய்’’ என்னா.
   பூமகன் உலகு புக்கான்.*
 
காதலன்   சேணின்  நீங்க  -   கணவனான   இரிசிகன்  செய்த
தவப்பலனால்  வான்வழி  செல்வதற்குத் தன்னை விட்டு நீங்க; கவுசிகை
தரித்தல்   ஆற்றாள்   -  என்  முன்னவளான  கவுசிகை  பொறுக்க
இயலாதவளாகி;  விழு  நதி  வடிவமாகி  -  பெரிய  ஒரு நதிவடிவம்
எடுத்துக்கொண்டு;  மீது  உறப்படரல்  உற்றால்  -  மேலே  போகப்
புறப்பட்டாள்;  மாதவர்க்கு அரசு நோக்கி- முனிவர்களுக்கு அரசனான
இரிசிகன் அதனைப் பார்த்து; மாநிலத்து உறுகண் நீக்க- நிலவுலகத்துத்
துன்பத்தைப் போக்க; நதியாய்ப் போதுக என்னா - ஆறாகப் பெருகிச்
செல்வாயாக  என்று (கூறி); பூமகன் உலகு புக்கான் - பிரமன் உலகைச்
சென்றடைந்தான்.

காதலன்:  கணவன்.  சேண்:  உயர்வு  இங்கு வானைக் குறிக்கும்).
தரிக்கல்:  பொறுத்தல்.  மீது:  உயர்வழி.  படரல்:  நகர்தல். உறுகண்:
துன்பம்.   போதுக:  போவாயாக.  வியங்கோள்வினைமுற்று.  பூமகன்:
மலரில் இருப்பவன். புக்கான்: புகுந்தான்.

கணவன்   விண்ணுலகேக.  பொறுக்கலாற்றாத  கவுசிகை  நதியாகி
மேலே  தொடர.  இரிசிகன் உலகத்துத் துன்பம் நீக்க. ஆறாகச் செல்க
எனக்கூறி. பிரமனுலகு சென்றான் என்க. என்னா: என்று கூறி. செய்யா
என்ற வாய்பாட்டு வினையெச்சம்.                             13