வேள்விப் படலம் - 430
காதி அரசெய்தியதும் மக்களைப் பெற்றதும்
430.
‘அன்னவன் தனக்கு. வேந்தன்.
அரசொடு முடியும் ஈந்து.
பொன்னகர் அடைந்த பின்னர்.
புகழ்மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு. யானும்.
கவுசிகை என்னும் மாதும்.
முன்னர் வந்து உதிப்ப. அந்த
முடியுடை வேந்தர்வேந்தன்.*
அன்னவன் தனக்கு வேந்தன் - அந்தக் காதி என்னும்
பெயருடைய அரச குமாரனுக்கு. தந்தையான குசநாபன்; அரசொடு
முடியும் ஈந்து - ஆட்சியுடன் அதற்குரிய மணிமுடியும் தந்து;
பொன்னகர் அடைந்த பின்னர் - விண்ணுலகு சென்றபின்பு; புகழ்
மகோயத்தில் வாழும் காதிக்கு- புகழ்மிகுந்த மகோதயம் என்ற நகரில்
அரசு புரிந்து வாழ்ந்து வந்த காதிக்கு; யானும் கவுசிகை என்னும்
மாதும் முன்னர் வந்து உதிப்ப - யானும் எனக்கு முன்பு வந்துதித்த
கவுசிகை என்ற பெண்ணும் வந்து பிறக்க; அந்த முடி உடை வேந்தர்
வேந்தன் - மணிமுடி புனைந்த அந்த மன்னர் மன்னனான காதி
வேந்தன்.
இது குளகப்பாட்டு. அடுத்த பாட்டுடன் பொருள் முடியும். முடி
மகுடம். பொன் நகர்: சுவர்க்கம். ‘பொன்’ உயர்வைக் குறிக்கும்
உபசாரச் சொல் ‘காதிக் கியானும்’ இதில் ‘கி’ குற்றியலிகரம். மாதர்:
அழகு. பண்பாகு பெயராய்ப் பெண்களை உணர்த்தும். ‘எம்முனாள்’
எனப் பின்னும் கூறுவது கொண்டு. ‘முன்னர் வந்து உதிப்ப’
எனப்பொருள் கூறப்பட்டது.
‘’குசநாபமன். தனது மகனான காதிக்கு அரசும் முடியும் தந்து. பின்
விண்ணுலகேக. காதிக்கு கவுசிகை என்ற மாதும். யானும்
(விசுவாமித்திரன்) வந்து பிறந்தோம்.’’ என்றான். 11
