வேள்விப் படலம் - 424
கௌசிகி நதியின் வரலாறு (424-433)
குசன் மக்கட்பேறு
424.
‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த
தூநதி யாவது’ என்று.
வரமுனிதன்னை. அண்ணல்
வினவுற. மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப்
பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் மனைவி தன்பால்
அளித்தவர் நால்வர் ஆகும்.*
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த- தேவர்களெல்லாம் துதித்து
வணங்குவதற்கு ஒத்ததாகிய; தூநதி யாவது என்று - தூய நதி
யாதாகும் என்று; வரமுனி தன்னை அண்ணல் வினவுற - சிறந்த
முனிவனாகிய விசுவாமித்திரனைப் பெருமைமிக்க ராமன் ்கேட்க;
மலருள் வைகும் பிரமன் அன்றளித்த - தாமரை மலரில்
தங்கியிருக்கும் பிரமன் முன்பு பெற்ற; வென்றிப் பெருந்தகை குசன்
என்று - வெற்றியை உடைய பெருந் தன்மையன் ஆகிய குசன்
என்று; ஓதும் அரசர் கோன் - பெரியோர்கள் புகழ்ந்து பேசும்
மன்னர் மன்னன்; மனைவி தன்பால் அளித்த மைந்தர் அருமறை
அனையார் நால்வர் - தன் மனையாள்பால் பெற்ற பிள்ளைகள்
அரியமறைகளைப் போன்ற நால்வராவர்.
சுரர்: தேவர். ஒத்த: போன்ற. தூ: தூய்மை. வைகல்: தங்கல்.
வினைவுறு: கேட்க. ஓதல்: புகழ்ந்து சொல்லுதல். மறை: வேதம்.
அரசர்கோன்: மன்னர் மன்னன்.
தேவர்களும் வணங்கும் அந்த நதி யாவது என ராமபிரான்
விசுவாமித்திர முனிவனைக் கேட்க. அதன் வரலாறு கூறுகிறான்
முனிவன். பிரமனுக்கு மகன் குசன் என்னும் வேந்தன். அவன் பெற்ற
மைந்தர்கள் நான்மறைக் கொப்பான நால்வர் என்பது கருத்து. 6
