வேள்விப் படலம் - 422
இராமபிரான் வினாவும் விசுவாமித்திரன் விடையும்
422.
இனையன நிகழ்ந்த பின்னர்.
காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க. ஆண்டு ஓர்
அரவம் வந்து அணுகித்தோன்ற
‘முனைவ! ஈது யாவது?’ என்று.
முன்னவன் வினவ. பின்னர்.
வினை அற நோற்று நின்ற
மேலவன் விளம்பலுற்றான்;
இனையன நிகழ்ந்த பின்னர் - இவையெல்லாம் நடந்த பின்பு
காவதம் இரண்டு சென்றார் - இராமன் முதலிய மூவரும் இரண்டு
காததூரம் நடந்து சென்றனர்; ஆண்டு அனையவர் கேட்க - அங்கு
அந்த மூவரும் கேட்டுகும்படியாக; ஓர் அரவம் வந்து
அணுகித்தோன்ற - ஒருபெருத்த குரல் பக்கத்தே எழ; முனைவ! ஈது
யாவது என்று முன்னவன் வினவ - முனிவரே இந்த ஓலம் எதனால்
தோன்றியது என ராமன் கேட்க; பின்னர் வினை அற நோற்று நின்ற
மேலவன் விளம்பல் உற்றான் - பின்பு. இரு வினையும் நீங்கத் தவம்
செய்து மாமுனிவனாக நின்ற விசுவாமித்திர முனிவன் சொல்லானான்.
நிகழ்தல்: நடத்தல். காவதம்: காதம் (பத்து நாழிகைத் தூரம்).
அரவம்: பேரொலி. முனைவன்: வினையின் நீங்கி விளங்கிய
மேலோன். முனைவன்: மூத்தவன் அனைவருக்கும் முன்னோனான
முதல்வன். வினையற: தீவினை நீங்க (இருவினையும் நீங்க). தோற்றல்:
நோன்பு. நின்ற: நற்குண நற்பண்புகளில் நினைத்த. விளம்பல்:
சொல்லல். உற்றான்: பொருந்தினான். ‘உறு’ என்று பகுதி இரட்டித்து
இறந்த காலம் காட்டிற்று. 4
