வெறி கொண்ட தாய்

வெறி கொண்ட தாய்

bookmark

ராகம் - ஆபோகி
தாளம் - ரூபகம்

பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
   பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்
   காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)    1

இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
   எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
   தாவிக் குதிப்பாள் - எம் அன்னை. (பேயவள்)    2

தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
   தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி - மது
   தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)    3

வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
   வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்
   தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)    4

பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
   பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும் - கணம்
   மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)    5