விவேகானந்தர் நரேந்திரர் என்ற நாமத்தை பெற்று இருக்கும் போது நடந்த சில சமபவங்கள் (பாகம் மூன்று)

விவேகானந்தர் நரேந்திரர் என்ற நாமத்தை பெற்று இருக்கும் போது நடந்த சில சமபவங்கள் (பாகம் மூன்று)

bookmark

ண்ணபிரானின் மகிமை :-

ஒரு முறை யமுனை ஆற்றங்கரையில் அமைந்து இருந்த பிருந்தாவனத்திற்கு நரேந்திரர் வந்தார். கிருஷ்ணரின் திவ்ய சரிதம் அவர் உள்ளமெல்லாம் களிநடம் புரிந்தது. பக்தி பெருக்கு மீதூர கோவர்தனகிரியை வலம் வந்தார். அன்று நரேந்திரர் தமக்குத் தாமே ஒரு கட்டளையிட்டுக் கொண்டார். "இன்று உணவைத் தேடக்கூடாது. தாமாகத் தேடி வந்தால் மட்டுமே உண்பது" என்பது தான் அது.

பிறகு மீண்டும் கோவர்த்தன கிரியை வலம் வந்து கொண்டே இருந்தார். அவரது மனம் திடமாக இருந்தது. ஆனால் உடல் சோர்ந்தது. பசி வயிற்றைச் சங்கடம் செய்தது. தீடீர் என்று மழை பெய்யத் துவங்கியது. நரேந்திரரின் காதை அடைத்துக் கொண்டது பசி. அவருக்கு அந்நிலையில் மயக்கம் வேறு வந்தது.

அப்போது 'சுவாமி' என்று யாரோ அழைக்கும் குரல் நரேந்திரரின் காதுகளில் விழுந்தது. நரேந்திரர் திரும்பிப் பார்க்காமலேயே வேகமாக நடந்து கொண்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது.

"சுவாமி உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன்" என்று பின்னாளில் இருந்து குரல் இன்னும் பலமாக ஒலித்தது.

குரல் கேட்டதும் பிரமையாக இருக்குமோ என்று நரேந்திரர் இன்னும் வேகமாக நடக்கலானார்.

பின்னால் வந்தவனும் ஓட்டமாக ஓடி வந்து நரேந்திரருக்கு எதிரில் வந்து நின்றான்.

நரேந்திரரை அமரச் செய்தான். உணவு பரிமாறினான். நரேந்திரர் அவனை கண்ணனாகவே கருதி வியப்போடு நோக்கிவிட்டு உண்பதில் கவனம் செலுத்தினார்.

நரேந்திரர் பசியாரியதும் வந்தவன் எழுந்து சென்று விட்டான். அவனை அவர் இதுவரை பார்த்ததே இல்லை.

தாமாக இன்று உணவைத் தேடுவதில்லை என்று எடுத்துக் கொண்ட உறுதியை கண்ணபிரான் நிறைவேற்றிய பெருங்கருணையை எண்ணி எண்ணி நரேந்திரர் வியப்படைந்தார். கண்ணனை மனதில் கொண்டாடினார்.

நரேந்திரரை மீண்டும் ஒரு முறை ஆட்கொண்ட குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்:-

காசீப்பூரில் ஒரு பாபா வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பெருமைக்கு உரியவர் என்று ஊர் மக்கள் அவரை தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தனர். அவரது பெயர் 'பவஹாரி பாபா". அவர் பூமிக்கடியில் வாழ்வதாக நரேந்திரர் கேள்வியுற்றார். அவரை தரிசிக்கும் ஆவலுடன் காசீப்பூருக்குச் சென்றார். அங்கு அந்த மகானை தரிசித்தார். பக்தியும் யோகமும் நிறைந்த ஞானியாக பவஹாரி பாபா காட்சி அளித்தார். அவரிடம் நரேந்திரர் தனக்கு ராஜ யோகம் கற்க வேண்டும் என்றும் அதனை தனக்கு கற்றுத் தருமாறும் வேண்டினார். ஆனால் பாபா நரேந்திரருக்கு ராஜயோகம் கற்றுத் தர மறுத்தார்.

ராஜயோகம் கற்க வேண்டுமானால் பாபாவையே குருவாக அடைய வேண்டும் என்று நரேந்திரர் எண்ணினார். அத்தகைய எண்ணம் அவருடைய (நரேந்திரர்) மனத்தில் தோன்றியதும், நரேந்திரர் இருந்த அறையின் வாயிலிலே தெளிவின்றி ஓர் உருவம் தோன்றியது. அது தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் தான் என்பதை நரேந்திரர் அந்த உருவத்தை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டார். அவ்வாறு கண்ட மாத்திரத்தில் தமது எண்ணம் திசை மாறியதை உணர்ந்து கண்ணீர் சிந்தினார் நரேந்திரர்.

தாம் பெற்று இருந்த ஆன்மீக சக்தியை எல்லாம், தன் மீது புகுத்திய குருமகராஜன் அல்லவா இவர்? சீடராக தான் மாறும் முன்பே குருவாகப் பரிந்து பரிந்து தத்துவங்களை ஊட்டியவர் அல்லவா இவர்? அத்தகைய குருதேவரை விட்டு விட்டு பிறிதொருவரை குருவாக ஏற்பது எத்தகைய அபசாரம் என்ற நினைப்பிலேயே நரேந்திரர் உள்ளம் துடித்துப் போனார். தமது தவறை உணர்ந்தார்.

குருதேவர் தம்மை தக்க சமயத்தில் தடுத்தாட் கொண்டதை எண்ணி பூரித்தார். அறையின் வாயிற் புறத்தில் நின்றபடியே எதுவும் பேசாமல் மோனப்பார்வையில் நரேந்திரரை ஊடுருவிப் பார்த்தார் குருதேவர். அந்தப் பார்வையே நரேந்திரரை ஆட்கொண்டது.

ஆயினும் பாபாவிடம் நரேந்திரரின் உள்ளம் சென்ற காலம் வரையில் இருபத்தொரு நாட்களிலும் குருதேவர் நரேந்திரரின் கண் முன்னே தோன்றி தமது தீட்சண்யமான பார்வையால் தமது சீடரின் உள்ளத்தில் இருந்த எண்ணத்தைச் சுட்டெரித்துக் கொண்டு இருந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நரேந்திரர், குருதேவரைத் (ராமகிருஷ்ண பரமஹம்சரைத்) தவிர வேறு எவரையும் குருவாக எண்ணியதில்லை. ராஜ யோகம் கற்பதற்கு மட்டுமேனும் பாபாவை குருவாக ஏற்க எண்ணிய எண்ணத்தையும் மாற்றிக் கொண்டார்.

நூல் நிலைய நிர்வாகியை தனது ஞானத்தால் பிரமிக்க வைத்த நரேந்திரர் :-

மீரட்டில் சுவாமிஜி தங்கியிருந்த போது ஜான் லுப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க விரும்பினார். மீரட்டில் உள்ள நூல் நிலையத்தில் இருந்து அவருடைய நூல்களை எடுத்துக் கொண்டு வருமாறு அகண்டானந்தரிடம் சொன்னார்.

அவ்வாறே அகண்டானந்தரும் கொண்டு வந்தார், பெரிய நூல்களாக அவை இருந்தன.

அவை அனைத்தையும் படித்து முடித்து விட்டு மறுநாளே நூல் நிலையத்தில் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறினார் சுவாமிஜி.

அகண்டானந்தரும் அவ்வாறே செய்தார். நூல் நிலைய நிர்வாகி அகண்டானந்தரிடம், "இந்தப் புத்தகங்களை எல்லாம் பார்ப்பதற்காகத் தான் எடுத்துப் போனீர்களா, படிப்பதற்காக இல்லையா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"படித்துவிட்டுத் தான் தருவதாக" அகண்டானந்தர் கூறிய பின்பும் நிர்வாகி அதனை நம்பவே இல்லை. இதைப் பற்றி சுவாமிஜியிடம் அகண்டானந்தர் கூறினார்.

உடனே சுவாமிஜி தாமே அந்த நூல் நிலையத்திற்குச் சென்றார். நேராக நிர்வாகியைப் பார்த்தார்.

"இந்தப் புத்தகங்களை படித்திருக்க மாட்டோம் என்று நீங்கள் சந்தேகப் பட்டீர்கள், இல்லையா. இதில் ஏதேனும் கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேனா என்று சோதித்துப் பாருங்கள்" என்று தன்னம்பிக்கையுடன் சுவாமிஜி கூறினார். நிர்வாகியும் தனது சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக சுவாமிஜியிடம் ஒரு சில கேள்விகளை அந்த நூலில் இருந்து கேட்டார். சுவாமிஜி சரியாகப் பதில் அளித்ததும் நிர்வாகி அயர்ந்து போனார். சுவாமிஜியின் திறமையை அறிந்து வியப்பு அடைந்தார்.

புத்தகங்களை ஒவ்வொரு வரியாக சுவாமிஜி படிக்க மாட்டார். ஒரு பக்கத்தின் முதல் வாக்கியமும் கடைசி வாக்கியமும் படித்தாலே முழுக் கருத்தையும் அவரால் புரிந்து கொள்ள முடியும் என்ற உண்மையை நிர்வாகி அறிந்து கொண்டார். சாமான்யமானவர் அல்லர் சுவாமிஜி என்ற வியப்பு எழுந்தது அவர் உள்ளத்தில்.

நரேந்திரரை நெருங்கி விலகிய ஆபத்து :-

சுவாமிஜி வட இந்தியாவில் பயணம் செய்த போது, சுவாமிஜியைப் பார்த்து ஒருவர் உழைத்துப் பிழைக்காமல் உலகத்துக்கு பாரமாக இருக்கிறாயே என்று ஏளனமாகப் பேசினார். அதைக் கேட்டு சுவாமிஜி மனம் வாடினாலும் தமக்குள்ளே யோசிக்கலானார். வீடு வீடாகச் சென்று இரந்துண்ணுவது அவருக்கே அவமானமாக இருந்தது. இந்த உடலைப் பேணிக் காத்து என்ன செய்யப் போகிறோம். எவரும் அணுக முடியாத அடர்ந்த காட்டில் தவம் செய்து உயிரை விடுவது என்று சுவாமிஜி முடிவு செய்தார். இருண்ட வனம் ஒன்றை நாடிச் சென்றார்.

மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். இரவு நேரம் ஆரம்பமானது. அந்தக் காட்டில் சலசலப்புச் சத்தமும் உறுமல் சத்தமும் கேட்டதும் சுவாமிஜி கண் விழித்தார்.

அவருக்கு சற்று தூரத்தில் நெருப்புத் துண்டுகள் போல இரண்டு கண்கள் அவரையே நோக்கின. சுவாமிஜி, அவை புலியோ சிங்கமோ ஏதோ ஒரு விலங்கின் கண்கள் என்பதைத் தெரிந்து கொண்டார். உயிரை விடத் தீர்மானித்தவருக்கு புலியைக் கண்டு அச்சம் ஏற்படுமா?

அவரை நோக்கிப் புலி மெல்ல அடியெடுத்து வந்தது. சுவாமிஜி தாம் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

புலி அவர் அருகே வந்ததும் தரையில் படுத்துக் கொண்டது.

சுவாமிஜிக்கு புலியின் செய்கை வியப்பாக இருந்தது. தம்மை நோக்கி வந்து விட்டு ஏன் படுத்துக் கொண்டது. ஒரு வேளை அதுவும் பல நாள் பட்டினியாக இருக்கலாம். பாவம். தம்மருகில் வந்து அடித்து உண்பதற்குக் கூட தெம்பின்றி விட்டதோ என்று எண்ணிய சுவாமிஜி எழுந்து அதன் அருகே செல்லத் துணிந்தார்.

அப்போது படுத்துக் கிடந்த புலி எழுந்து ஒரு முறை உறுமி விட்டுப் பாய்ந்தோடி மறைந்து விட்டது.

இறைவன் தம்மிடம் வேறு ஒரு பயனை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார் போலும். அதனாலேயே நெருங்கி வந்த மரணம் விலகி ஓடி விட்டது என்று சுவாமிஜி சமாதானம் அடைந்தார். உயிரை விட வேண்டுமென்ற எண்ணத்தையும் கைவிட்டார்.

நாத்திகரை ஒரு நாள் சந்திப்பில் ஆத்திகராக மாற்றிய நரேந்திரர்:-

சுவாமிஜி தனது துறவுக் கோலத்தில் பல ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஒரு முறை சென்னைக்கு சுவாமிஜி விஜயம் செய்தார். அப்போது அவரைக் கண்டு அவருடன் வாதம் செய்வதற்காக ஒரு நாத்திகர் வந்தார். அவர் கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய சிங்காரவேலு முதலியார் என்பவராவார்.

கிறிஸ்தவ மதத்தில் ஏற்கத் தகுந்த நல்ல அம்சங்கள் இருப்பதாகக் கூறி இந்து மதத்தை குறை கூறினார் அவர். சுவாமிஜி இந்து மதத்தின் கருத்துக்களை அவற்றுள் பொதிந்து கிடக்கும் பேருண்மைகளை விளக்கி, விரித்து அற்புதமாகப் பேசினார். இனிமையும் கம்பீரமும் கலந்த வீணைக் குரலின் தாக்கமும் பேசிய பொருளின் ஏற்றமும் சிங்காரவேலு முதலியாரின் நாத்திக வாதங்களைப் பொடிப் பொடியாக ஆக்கின.

சிங்காரவேலு முதலியார் சுவாமிஜியிடம் தோற்றதில் மகிழ்ச்சியே அடைந்தார். முதலியாரை சுவாமிஜி "கிடி" என்று பெயரிட்டு அழைப்பார். "கிடி வந்தார்- என்னைக் கண்டார் – என்னால் வெல்லப்பட்டார்" என்று சுவாமிஜி கூறினார்.

காலம் காலமாக நாத்திகத்தில் ஊறிக் கிடந்த முதலியாரை ஒரே ஒரு நாள் பேச்சிலேயே ஆத்திகராக மாற்றிக் காட்டிய வல்லமையை சுவாமிஜி பெற்று இருந்தார். ஆத்திகராக மாறியதோடு அல்லாமல் சுவாமிஜியின் பணிகளுக்குத் தம்மையே அர்பணித்துக் கொள்ளவும் முன் வந்தார் முதலியார்.

'பிரபுத்த பாரதம்' என்ற பெயரில் ஒரு வேதாந்த பத்திரிக்கையை சுவாமிஜி சென்னையில் தொடங்கினார். அந்தப் பத்திரிக்கையின் கௌரவ நிர்வாகியாக 'கிடி' என்று அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியாரையே சுவாமிஜி நியமனம் செய்தார். கொள்கைகளை மாற்றியதோடு மட்டும் இன்றி மாறிய கொள்கையில் நிலைத்து நிற்கவுமே இத்தகைய ஏற்பாட்டை சுவாமிஜி செய்தார்.

நரேந்திரரின் தன்னடக்கம் :-

துறவுக் கோலத்தை தரித்த பிறகு நரேந்திரர் தமது நாமத்தை விவிதிசானந்தர் என்று மாற்றிக் கொண்டார். ஒரு முறை அவர் இமயமலைக்கு பயணமானார். குருதேவரின் மற்றொரு சீடரான அகண்டானந்தருடன் சுவாமிஜி விவிதிசானந்தரும் (அதாவது நரேந்திரரும்) இமயமலை செல்லும் வழியில் பகல்பூரில் தங்கினார்கள். சுவாமிஜி தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர் மன்மதநாதர் பௌத்த தத்துவ நூல் ஒன்றைப் படிக்கலானார்.

சுவாமிஜிக்கு பௌத்த தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் அவர் அந்த நூலைப் பற்றிக் கேட்டார்.

மன்மதநாதர் "சுவாமிஜி உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?" என்று கேட்டதும் "கொஞ்சம் தெரியும்" என்றார் சுவாமிஜி. பின்பு தமது ஆர்வத்தை அடக்க முடியாமல், சுவாமிஜி புத்தரின் பெருமை, தத்துவங்களின் விளக்கம் எனப் பல எடுத்துக் காட்டுகளுடன் அற்புதமாக ஆங்கிலத்தில் பேசியதும் மன்மதநாதர் திகைத்துப் போய்விட்டார்.

பிறகு மீண்டும் சமஸ்கிருத மொழியில் ஞானம் இருக்கிறதா ஸ்வாமிஜிக்கு என்று மன்மதநாதர் அறிய விரும்பினார், சில உபநிஷத புத்தகங்களைக் கொண்டு வந்து அதில் கேள்விகளைக் கேட்டார். சுவாமிஜியின் பதில்கள் ஒவ்வொன்றும் அவருடைய ஞானத்தை எடுத்துக் காட்டுவது போல இருந்தன.

மற்றும் ஒரு நாள் ஸ்வாமிஜி பாடுவாரா என்று கேட்டார் மன்மதநாதர். சுவாமிஜியோ, "சிறிதளவு சங்கீத ஞானம் உண்டு" என்று பணிவுடன் கூறினார். பின்பு மன்மதநாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுவாமிஜி அற்புதமாகப் பாடினார்.

பாடலா அது? கானாமுதம். மன்மதனாதரின் வீடு முழுவதையும் அந்த இனிய கானம் சூழ்ந்தது. அத்துடன் சுவாமிஜியின் குரல் வளமும் இசை ஞானமும் அனைவரையும் மெய்மறக்கச் செய்தன.

சுவாமிஜியாகிய நரேந்திரரின் பெருமை அளந்து கூற முடியாதது என்பதை மன்மதநாதர் மேற்கண்ட சம்பவங்கள் மூலமாக அறிந்து கொண்டார்.

நரேந்திரரின் எளிமை

மைசூர் மகாராஜாவின் விருந்தினராக சுவாமிஜி சிறிது காலம் தங்கி இருந்தார். சுவாமிஜியின் பேச்சாற்றல், தீர்க்கமான சிந்தனை, சத்திய வேட்கை, ஞானம் இவை அனைத்தும் மகாராஜாவையும் மக்களையும் கவர்ந்தன.

மகாராஜாவிடம் திவானாக இருந்தவர் சேஷாத்திரி அய்யர். அவர் ஒரு நாள் தமது உதவியாளரிடம் ஆயிரம் ரூபாயை அளித்து, சுவாமிஜி விரும்பியதை எல்லாம் அவருக்கு வாங்கிக் கொடுக்குமாறு கூறினார்.

உதவியாளரும் சுவாமிஜியும் கடைத் தெருவுக்குச் சென்றார்கள். கடைத்தெருவில் பலவிதமான கைவினைப் பொருட்கள் இருந்தன. சந்தன மரத்தினால் செய்யப் பெற்ற பதுமைகளும் பொருட்களும் கமழ்ந்தன.

கடை வீதியில் இருந்த ஒவ்வொன்றையும் சுவாமிஜி பார்த்து மகிழ்ந்தார். உடனே உதவியாளர் அதை வாங்கட்டுமா என்று கேட்டால் வேண்டாம் என்று தடுத்து விடுவார்.

கடை வீதி முழுவதையும் இருவரும் சுற்றி வந்து பார்த்தாயிற்று. ஆனால் உதவியாளர் கொண்டு வந்த தொகை பையில் அப்படியே இருந்தது. ஏதேனும் வாங்கிக் கொடுக்காவிடில் திவான் தம்மையல்லவா கடிந்து கொள்வார் என்று எண்ணிய உதவியாளர் சுவாமிஜியை வற்புறுத்தினார்.

"எனக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம் என்று தானே சேஷாத்ரி அய்யர் கூறி இருக்கிறார்?" என்று சுவாமிஜி மிகுந்த ஆர்வம் பொங்கக் கேட்டார்.

"ஆமாம்" என்றார் உதவியாளர்.

"இங்கே நல்ல சுருட்டு கிடைத்தால் ஒன்றே ஒன்று வாங்கிக் கொடு அது போதும்" என்றார் சுவாமிஜி.

காரியதரிசிக்கு ஒரே வியப்பு. முக்கால் ரூபாய் கூடப் பெறாத சுருட்டு போதும் என்கிறாரே! விலை உயர்ந்த பொருட்களைப் பார்த்த பின்பும் அதை தன்னுடைய தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாத இவரல்லவோ உண்மையான சந்நியாசி என்று எண்ணி வியந்தார்.

நரேந்திரர் சந்திப்பால் சுவாமி சதானந்தர் ஆன சரத் சந்திரர்:-

சுவாமிஜி ஹரித்வார் என்னும் புனிதத் தளத்திற்கு யாத்திரையாகச் செல்லும் போது சுவாமிஜி ஹத்ராஸ் என்ற சிறிய ரயில் நிலையத்தில் இறங்கினார். ரயில் நிலையத்திலேயே அவர் தியானத்தில் ஆழ்ந்தார். ஒளி வீசும் தோற்றத்துடன் ஞானச் செறிவு துலங்கும் முகத்துடன் சுவாமிஜி சிவபெருமானைப் போல அமர்ந்து இருந்த கோலத்தைக் கண்டு அங்கு ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த சரத்சந்திர குப்தர், அவர்பால் ஈர்க்கப் பட்டார்.

தியானம் கலைவதற்காகவே காத்திருந்த சரத்சந்திரர் சுவாமிஜியை அணுகி," தாங்கள் பசியுடன் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்" எனக் கேட்டதும் சுவாமிஜி ஆமாம் என்பது போலத் தலை அசைத்தார்.

உடனே சுவாமிஜியை அழைத்துக் கொண்டு தமது இல்லத்துக்கு விரைந்தார். அன்போடு அவருக்கு சரத் உணவளித்தார். மேலும் பல நண்பர்கள் சுவாமிஜியைக் காண சரத்தின் இல்லத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். பஜனையும் சொற்பொழிவும் தொடர்ந்து நடைபெற்றது.

சுவாமிஜியின் கானாமுகத்திலே பக்தர்கள் உள்ளம் கரைந்து கட்டுண்டு கிடந்தார்கள். அன்பு மழையிலே அவ்வாறாக நனைந்த போதும் சுவாமிஜியின் முகத்தாமரையில் கவலையின் ரேகைகள் இழையோடுவதை சரத்தின் கண்கள் கவனித்தன. அதுபற்றி சுவாமிஜியிடமே கேட்டார்.

குருநாதர் தமக்குக் கட்டளை இட்டது பற்றியும் நாடு முழுவதும் ஆன்மிகம் தழைக்கப் பாடுபட வேண்டும் என்பதையும் கூறிய சுவாமிஜி, " ஈடுப்பட்டிருக்கும் பணியையும் எனது ஆற்றலையும் எண்ணியே கவலைப்படுகிறேன்" என்று தமது உள்ளத்தை வெளியிட்டார்.

சுவாமிஜியின் பணிக்குத் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தருவதற்குத் தாயாராக இருப்பதாக சரத் அப்போது உறுதியளித்தார்.

அது கேட்ட சுவாமிஜி சரத்திடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டார்," சரத், கப்பரை எடுத்துக் கொண்டு உன்னால் பிச்சை கேட்க முடியுமா?" என்று. சுவாமிஜி அவ்வாறு கேட்டதும் உடனே சரத் கையில் கப்பரையை எடுத்துக் கொண்டார். ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்த ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் இருந்த சுமை கூலிகளிடமே சென்று பிச்சை கேட்டு நின்றார்.

சரத் சந்திரரின் உளப்பாங்கை சுவாமிஜி உணர்ந்து கொண்டார். தம்முடனே பல தலங்களுக்கு அவரை அழைத்துச் சென்றார். பின்பு சரத் சந்திரகுப்தாவின் விருப்படியே சன்னியாச தீட்சையையும் அளித்தார். சரத் சந்திரர் சுவாமி சதானந்தர் ஆனார்.