விலங்குகளின் தோற்றம்

bookmark

விலங்குகளின் தோற்றம் நான்முக படைப்பு கடவுளான பிரம்மதேவன், இந்த தாவரங்கள் லோக வியாபாரத்திற்கு உரிய எந்தவிதமான ஆற்றலும் அற்றவை. ஆகையால், இவற்றில் எந்தவிதமான பயனும் இல்லையே என்று சிந்தித்துக்கொண்டு இருந்த தருணத்தில் பிரம்மதேவனின் பாரிச பாகங்களில் அதாவது அவருடைய உடலின் ஒரு பகுதியிலிருந்து மிருகங்கள் மற்றும் திரியக்குகள் (பசுக்கள், பறவைகள் முதலிய விலங்குகள்) பிறந்தன. உடலின் ஒரு பகுதியின் பக்கங்களின் குறுக்காக தோன்றியதனால் இவைகள் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன. இவ்விதமாக தோன்றிய உயிரினங்கள் யாவும் விவேகம் என்பது எதுவும் இல்லாமல் இருந்தன. ஞானத்தை அறிந்து கொள்ளக்கூடிய தன்மைகளும் இதன் இடத்தில் காணப்படவில்லை. இதைவிட இந்த உயிரினங்களிடத்தில் எந்தவிதமான ஒழுக்கமான நடத்தைகளும் இல்லாமல் இருந்தன. அதாவது இவ்வாறு தோன்றிய உயிரினங்கள் தன்னுடைய தாயுடன் சேர்ந்து பலவிதமான அக்கிரமமான செயல்களையும் மேற்கொண்டது. தம்முடைய ஞானம் என்பது என்னவென்றால் தன்னுடைய தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டு அகங்கார எண்ணங்களுடன் இருபத்திதெட்டு வகையின் அடிப்படையில் சுக, துக்கங்களை அறிந்தவர்களாக இருந்து வந்தன. இருபத்திதெட்டு விதமான படைப்புகள் இரட்டை குளம்புள்ள உயிரிகள் ஆடு, மாடு, எருமை, மான், பன்றி, கவயம், ருரு, அவி, ஒட்டகம் ஆகிய ஒன்பது வகைகளும் ஒற்றை குளம்புள்ள உயிரிகள் கழுதை, குதிரை, கோவேறு, கவுரம், சமரம், கவுரி ஆகிய ஆறு வகைகளும் நாய், நரி, செந்நாய், புலி, பூனை, முயல், தயகம், சிங்கம், குரங்கு, யானை, ஆமை உடம்பு முதலிய விலங்குகள் ஐந்து முகங்களை உடைய ஜந்துக்கள் 13 வகைகளாக இருக்கின்றன. இந்த பிரபஞ்சத்தில் பலவிதமான உயிரினங்கள் இருந்தாலும் அவர்களுடைய உடல் கூறுகள் என்பது இந்த 28ல் அடங்கும்.மேலும் இவ்விதமாக தோன்றிய எந்த உயிரினங்களும் தன்னுடைய தாய், தகப்பன், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று எந்தவிதமான சம்பந்தத்தையும் அறிந்துகொள்ளாமல் இருந்தன. இவ்விதமாக தோன்றிய உயிரினங்களை கண்டதும் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவர், இந்த உயிரினங்களின் தோற்றத்தினால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. ஆகவே, சிறப்பாக இருக்கக்கூடிய உயிரினங்களையும் அதன் வகைகளை சிரிஷ்டிக்க வேண்டும் என்று எண்ண துவங்கினார். அவருடைய எண்ண தோற்றத்தின் விளைவாக மூன்றாவது படைப்பு தோன்றியது. படைப்பு கடவுளான பிரம்மதேவரின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சாத்வீக குணப்பிரதானராயும், சுகானுபவமும், ஆனந்தமும் மிகுந்தவராயும், ஆன்ம ஞானமும், விவேகமும் உள்ளவர்களாகவும் எப்போதும் நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள். அவர்கள் ஊர்த்துவ ஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதஸுகள் என்ற பெயரை பெற்று பூமியை தீண்டாதவர்களாக இருந்தனர். பிரம்மன்! இந்த வகையாக தமது மூன்றாவது படைப்பில் சாத்வீக குணப்பிரதானராக பிறந்த தேவர்களை கண்டு மகிழ்ந்தார். ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரம்மன் நினைத்து லோக சாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருந்தார்.அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்திய பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று. அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரம்மனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால் மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத்தக்கவர்கள் ஆனார்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாத்வீக குணாதிக்கமும், ஒரு காலத்தில் ராட்சஸ குணோதிரேகமும், ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய் உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு ஆத்ம, மன, புத்தி இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய், உலகியல் செயல்களை செய்யாதவராய் இருந்தார்கள்.இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள். அதன் பிறகு அம்புஜாசனனான பிரம்மன், தாவர ஜாதிகளுக்கும், மிருக ஜாதிகளுக்கும், தேவதைகளுக்கும், மனிதர்களுக்கும் அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினார்.இது தாமசமாயும், சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும். அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரம்மன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும். மைத்ரேயரே! இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு, அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளை கூறினேன். இந்த படைப்புகள் ஒன்பது வகை படைப்புகள் என்று சொல்லப்படுகின்றன. அதாவது முன்பே நான் உமக்கு எடுத்துக்கூறி மகத்தத்துவ படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய சாத்வீக, ராட்சஸ, தாமச குணத்துமகமான அகங்கார படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ சொரூபனான இரண்ய கர்ப்பனுடைய சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருத படைப்பு என்று சொல்லப்படும்.ஆயினும், அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால், நித்திரையில் இருக்கும் புருஷனுடைய விருப்பம் இல்லாமையே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க, அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதை போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும் முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்ய கர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக, அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும்.முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய, நான்காவதான தாவர சிருஷ்டியும், ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும், ஏழாவதான மனித படைப்பும், எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரக படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும் பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும்.ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம், பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரண்ய கர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன். இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, முனிவரே! படைப்பு வகைகளை தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள். இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்ல துவங்கினார்.