வனம் புகு படலம் - 2132
2132.
எயினர் தங்கு இடம் இருடிகள்
இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக்
கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன
பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குருந்தம் நின்று
அரும்பின முருந்தம்.
எயினர்தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள்
இருப்பிடம்ஏய்ந்த - தவமுனிவர்களது தவச்சாலையைப் போல ஆயின;
வயின் வயின்தொறும் -பக்க இடங்களில்எல்லாம்; மணி நிறக்
கோபங்கள் மலர்ந்த - செம்மணி போன்றநிறமுடைய இந்திர கோபப்
பூச்சிகள் தோன்றின; பயில் மரம் தொறும் -நெருங்கியுள்ளமரங்களில்
எல்லாம்; பரிந்தன பேடையைப் பயிலும் -தம்மைப் பிரிந்து
இரங்கினவாயபெண்குயில்களை அழைக்கின்ற; குயில் -ஆண்குயில்கள்;
இரங்கின - இரங்கிக்கூவின; குருந்தம்- குருந்த மரங்கள்; முருந்தம்-
மயிலிறகின் அடிபோல; நின்று அரும்பின - அரும்புகளைத்தந்தன.
முருந்து - மயிலிறகின் அடி. அது குருந்த மரத்து அரும்புக்கு
உவமை. பயிரும் என்றிருத்தல் சிறப்பு; சங்க நூல்களில் இதுவே சொல். 45
