வனம் புகு படலம் - 2130
2130.
படர்ந்து எழுந்த புல்,
பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம்
தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம்
வயின்தோறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை
முரன்றன தும்பி;
படர்ந்து எழுந்த புல் - தரைமீது பரவித் தோன்றிய புற்கள்,
பசுநிறக்கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம்
ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன; கேகயம் - மயில்கள்;
தோகைகள் கிளர - பீலிகல்அசைய; மடந்தைமார் என - பெண்களைப்
போல; வயின் தொறும் - பக்கங்களில்எல்லாம்; நாடகம் நவின்ற -
நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்)
தொடர்ந்து; பாணரின் - இசைப் பாணர்களைப் போல; பாங்கு இசை
முரன்றன - இதமான இசையை ஒலித்தன.
பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படந்துள்ளன. மயில்
நடனம் ஆட, வண்டுஇசைபாட வழி இனிதாயிற்று என்பதாம். 43
