வனம் புகு படலம் - 2118
2118.
‘கங்கையாளொடு கரியவள்,
நாமகள், கலந்த
சங்கம் ஆதலின், பிரியலென்;
தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும்,
அரும் பெறல் தீர்த்தம்;
எங்கள் போலியர் தரத்தது அன்று;
இருத்திர் ஈண்டு’ என்றான்.
‘கங்கையாளொடு - கங்கா நதியுடனே; கரியவள் - யமுனையும்;
நாமகள்- சரஸ்வதி நதியும்; கலந்த - கூடிய; சங்கம் - கூடல் (பிரயாகை);
ஆதலின் - ஆகையால்; பிரியலென் - இதை விட்டு நீங்காமல்
இருக்கின்றேன்; தாமரைச் செங்கண் அம் கண் நாயக! - தாமரை
போலும் சிவந்த கண்களைப் பெற்றுள்ள அருளுடையஇராமனே;
அயனுக்கும் - பிரம தேவனுக்கும்; அரும் பெறல் தீர்த்தம் -
கிடைத்தற்கரிய (புண்ணிய) தீர்த்தமாகும்; எங்கள் போலியர் தரத்தது
அன்று -எம்போன்ற முனிவர்களது தன்மையில் அடங்குவது அன்று
இதன் பெருமை; ஈண்டு இருத்திர்’ -இங்கேயே நீங்களும் இருப்பீர்களாக;’
என்றான் -.
கங்கையும் யமுனையும் கட்புலனுக்கு எட்டாமல் சரசுவதி நதியும்
கூடிய திரிவேணி சங்கமம் என்னும் பிரயாகை விசேட தீர்த்தமாகும். தீர்த்த
மகிமை கூறிஇராமனைத் தங்க வேண்டினான்.
