வனம் புகு படலம் - 2117
பரத்துவாச முனிவன் வேண்டுகோள் (2117-2118)
கலிநிலைத்துறை
2117.
‘நிறையும், நீர், மலர், நெடுங் கனி,
கிழங்கு, காய் கிடந்த’
குறையும் தீயவை; தூயவை
குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில்
உயர் தவம் முயல்வார்க்கு
இறையும், ஈது அலாது இனியது ஓர்
இடம் அரிது; இன்னும்,
‘நிறையும்நீர் - நீர் நிரம்பியுள்ளது; மலர், நெடுங்களி, கிழங்கு,
காய் கிடந்த - பூக்களும், பெரும்பழங்களும், கிழங்குகளும், காய்களும்
உள்ளன; தீயவை குறையும் - தீவினைகளும் போய்விடும்; தூயவை
குறைவு இல - நற் செயல்களுக்குயாதொரு குறைவும் இல்லை; இவ்வழி-
இவ்விடத்தில்; எம்மொடு உறையும் -எம்மோடுநீங்களும் வசியுங்கள்;
ஒருங்கினில் உயர்தவம் முயல்வார்க்கு -மன ஒருமையால் மிக உயர்ந்த
தவத்தைச் செய்கிறவர்களுக்கு; இறையும் -தங்குதற்கு இடம்; ஈது அலாது
இனியது ஓர் இடம் அரிது’ - இது வல்லாமல் இனிமையான வேறு ஓர்
இடம் கிடைத்தல்அரிதாகும்; இன்னும் - மேலும்....
தவம் செய்வார்க்கு உணவு வகைகள், மலர், நீர் முதலியன
நிரம்பியிருத்தல்,தீச்செயல்களுக்கு இடமின்மை, நற்செயல் விளைதல்,
மன ஒருமைக்கு வேண்டிய அமைதிச் சூழல்இத்தனையும் கூடியிருத்தலின்
இது மிகச் சிறந்த இடம் என்றான் முனிவன். இறுத்தல் - தங்குதல்; இணை -
தங்கும் இடம். 30
