வனம் புகு படலம் - 2116
பரத்துவாசன் நினைவும் செயலும்
முனிவன் தன்னுடன் தங்கியிருக்குமாறு இராமனை வேண்டுதல்
2116.
வைகினர் கதிர் நாறும்
அளவையின் மறையோனும்,
‘உய்குவெம் இவனோடு யாம்
உடன் உறைதலின்’ என்பான்,
செய்தனன் இனிது எல்லாம்;
செல்வனை முகம் முன்னா,
‘கொய் குல மலர் மார்ப!
கூறுவது உளது’ என்றான்;
வைகினர் - (மூவரும்) தங்கினர்; கதிர் நாறும் அளவையின் -
சூரியன்தோன்றும் வைகறைப் போதின்கண்; மறையோனும் - பரத்துவாச
முனிவனும்; ‘இவனோடுயாம் உடன் உறைதலின் உய்குவெம்’
என்பான் - ‘இவ் இராமனோடு யாம் சேரத் தங்கப்பெறுதலின் நற்கதி
பெறுவோம்’ என்று கருதுபவனாய்; எல்லாம் இனிது செய்தனன் -
இராமனுக்கு வேண்டுவ எல்லாம் இனிமையாகச் செய்து; செல்வனை முகம்
முன்னா - இராமனைமுகம் நோக்கி; ‘கொய் குல மலர் மார்ப! - கொய்த
கூட்டமான மலர்களை அணிந்தமார்பினை உடையாய்!; கூறுவது உளது’ -
(உன்னிடத்தில்) யான் கூற வேண்டுவது உளது; என்றான் -.
முன்னுதல் - கருதுதல் என்னும் பொருள் பெறும். இங்க ‘நோக்கி’
என்றதாம். 29
