வனம் புகு படலம் - 2115
பரத்துவாச முனிவன் விருந்தோம்பல்
முனிவன் விருந்தோம்புதுல்
2115.
புக்கு, உறைவிடம் நல்கி,
பூசனை முறை பேணி,
தக்கன கனி காயும்
தந்து, உரைதரும் அன்பால்
தொக்க நல்முறை கூறி,
தூயவன் உயிர்போலம்
மக்களின் அருள் உற்றான்;
மைந்தரும் மகிழ்வு உற்றார்.
புக்கு - தவச்சாலையில் புகுந்து; உறைவிடம் நல்கி - அவர்கள்
தங்குதற்குரிய இடத்தைத் தந்து உபசரித்து; தக்கன கனி காயும் தந்து -
உண்ணத்தக்கனவாகிய காய் கனிகளையும் கொடுத்து; உரைதரும்
அன்பால் -பாராட்டத்தகுந்த அன்போடு; தொக்க நல் முறை கூறி -
கூடிய நல்ல உபசாரவார்த்தைகளைச் சொல்லி; தூயவன் - தயரதனது;
உயிர் போலும் - உயிர்போலச் சிறந்த; மக்களின் - பிள்ளைகளினிடத்து;
அருள் உற்றான் - அருளைச்செய்தான்; மைந்தரும் மகிழ்வு உற்றார் -
முனிவனது உபசரிப்பில் இராமலக்குவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
சீதை இராமனுள் அடங்கியவள் ஆதலின் மைந்தர் என்றார். தூயவன்
பரத்துவாசனும்ஆம். 28
