வனம் புகு படலம் - 2110
பரத்துவாச முனிவன் வருந்தல்
முனிவன், இராமன் வனம் வந்த காரணம் வினாவல்
2110.
அம் முனி வரலோடும்,
அழகனும், அலர் தூவி
மும் முறை தொழுதான்; அம்
முதல்வனும், எதிர்புல்லி,
‘இம் முறை உருவோ நான்
காண்குவது?” என உள்ளம்
விம்மினன்; இழி கண்ணீர்
விழி வழி உக நின்றான்
அம் முனி வரலோடும் - அத்தகைய பரத்துவாச முனிவன் வந்த
அளவில்; அழகனும் -இராமனும்; அலர் தூவி - மலர்களைத் தூவி;
மும்முறை தொழுதான் - மூன்று முறைவணங்கினான்; அம் முதல்வனும்-
அந்தப் பெரியோனாகிய பரத்துவாசனும்; எதிர்புல்லி - எதிரே தழுவி;
இம்முறை உருவோ நான் காண்குவது என- இப்படிப்பட்டவேடத்தொடு
கூடிய வடிவத்தையோ என் கண்ணால் காணும்படியானது என்று; உள்ளம்
விம்மினன் -மனம் பொருமினனாய்; இழி கண்ணீர் விழி வழி உக
நின்றான் - கீழ்நோக்கிஇறங்கும் கண்ணீர் கண்களின் வழிவந்து கீழே
சிந்தும்படி நின்றான்.
அரச குமாரனின் தவக் கோலத்தைக் கண்டானாதலின் ‘இம்முறை
உருவோ நான் காண்பது’ என்றுஇரங்கினான். 23
