வனம் புகு படலம் - 2095
2095.
‘அருந்ததி அனையாளே!
அமுதினும் இனியாளே! -
செருந்தியின் மலர் தாங்கும்
செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின்
பொலிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து
எழுவன; - இயல் காணாய்!
அருந்ததி அனையாளே! - அருந்ததியை ஒத்தவளே!; அமுதினும்
இனியாளே! - அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே!; செருந்தியின் மலர்
தாங்கும் - செருந்திமலரைத் தாங்கிக்கொண்டுள்ள; செறி இதழ் -
நெருங்கிய இதழ்களை உடைய; வனசோகம் - காட்டின் கண் உள்ள
அசோகம் ஆனது; பொருந்தின களி வண்டின் பொலிவன -தம்மிடத்தே
பொருந்தினவாய களிப்பு நிறைந்த வண்டுகளாற் பொலிவனவாகிய அவை;
பொன்னூதும் இருந்தையின் - பொன்னை வைத்து ஊதுகின்ற
பொற்கொல்லனது கரியில்; எழுதீ ஒத்து எழுவது ஓர் இயல் - மேல்
எழுந்து எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்ற ஓர் தன்மையை;
காணாய் -.
செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர்
நெருப்பாகவும், அதனைச்சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமை
கொள்க. இருந்தை - கரி. 8
