வனம் புகு படலம் - 2091
2091.
‘பாண், இள மிஞிறு ஆக,
படு மழை பணை ஆக,
நாணின தொகு பீலி
கோலின நடம் ஆடல்,
“பூணியல்! நின சாயல்
பொலிவது பல கண்ணின்
காணிய” எனல் ஆகும்,
களி மயில் - இவை காணாய்!
பூண்இயல் - அணிகளை இயல்பாக உடையவளே!; களிமயில் -
களிப்புநிறைந்த மயில்கள்; இள மிஞிறுபாண் ஆக - இளைய வண்டு
பாட்டுப் பாடும் பாணன்ஆகவும்; படு மழை- பொழிகின்ற மழையின்
ஒலி; பணை ஆக - பறை ஒலியாகவும்கொண்டு; நாணின -
வெட்கமுற்றனவாய்; தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகைகளை;
கோலின -விரித்து வளைத்தனவாய்; நடம்ஆடல் - நடனம் ஆடுதல்;
நின சாயல் பொலிவது -உன்னுடைய சாயல் தம்மிடத்தேவிளங்குவதை;
பல கண்ணில் - தம்முடைய தோகையில் உள்ளபலகண்களால்; காணிய-
காண்பதற்கு; எனல் ஆகும் -என்று சொல்லாம்படியுள்ள; இவை - இக்
காட்சிகளை; காணாய் -.
தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித்
தோன்றா; விரித்தவழிகண்கள் தோன்றும் ஆதலின், ஆடும் மயில் தம்
தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல்தம்மிடத்தே
பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது போலும் என்று கூறினார். 4
