ருத்திரனின் தோற்றம்

bookmark

ருத்திரனின் தோற்றம் மைத்ரேயரே! நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியை எவ்விதம் செய்தார்? என்பதையும் யாம் உமக்கு எடுத்து உரைக்கின்றோம் கேட்பாயாக!கல்பாதி காலம் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில், இரணிய கர்ப்பன் தனக்கு நிகராக சமமாக இருக்கக்கூடிய ஒரு குமாரனை பெறவேண்டுமென்று எண்ணி கொண்டிருந்தார். அவர் எண்ணி கொண்டிருந்த அதேநேரத்தில் அவருடைய மடியில் கருப்பும், சிவப்பும் கலந்த நிறத்தில் நீலலோகிதனான் என்ற குமாரன் ஒருவன் தோன்றினான். அவ்விதமாக தோன்றிய குமாரன் இனிய குரலுடன் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தான்.தன்னுடைய மகனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த பிரம்மதேவனும் என் மகனே என்னை இவ்விதம் ரோதனம் (அழுகை) செய்கின்றாய் என்று கேட்க அவருடைய மகன் தனக்கு நாமதேயம் கொடுங்கள் என்று கூறினான். தனக்கு நிகரான சக்தியும், வலிமையும் இருக்கக்கூடிய தன்னுடைய மகனின் வேண்டுதலுக்கும், விருப்பத்திற்கும் இணங்கி நான்முகனான பிரம்மதேவன், மகனே! நீ ருத்திரன் என்ற பெயரைப் பெற்று புகழ்ச்சி அடைவாயாக என்றும், இனிமேலாவது என்னை ரோதனம் செய்யாமல் தைரியத்துடன் இருப்பாயாக என்றும் கூறினார்.நான்முகனான பிரம்மதேவன் இவ்விதம் உரைத்தும் ருத்திரன் மீண்டும் அவரை ரோதனை செய்த தொடங்கினான். அவனுடைய ரோதனையினால் பிரம்மதேவன் அவனுக்கு பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்று ஏழு பெயர்களை சூட்டினார். அந்த வெவ்வேறு பெயர்களை உடைய ருத்ர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும் அவர்களுக்கு உண்டான பத்தினிகளையும், புத்திரர்களையும் அளித்தார். அந்த எழுவரின் ஸ்தானங்களாவன சூரியன், ஜலம், பூமி, அக்னி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும். அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே சுவர்ச்சலை, உஷை, சுகேசி, சிவை, சுவாகை, திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள். இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன், சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள் ஆவார்கள். இவர்களுடைய புத்திர பௌத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன் தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சதி தேவியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சதி தேவியானவள் தன்னுடைய தந்தையின் மீது கொண்ட கோபத்தினால் தான் கோபித்துக் கொண்டு தன்னுடைய சரீரத்தை விட்டு நீங்கினாள். பிறகு இமவான் மேனை என்ற தம்பதியருக்கு உமை என்ற திருநாமம் கொண்டிருக்கக்கூடிய பெண்ணாக பிறந்தாள். தட்ச பிரஜாபதியின் மகள் என்ற பெயரினை அழித்து, இமாவானுடைய மகனாக பிறந்த உமையவள் எந்நேரமும் சிவசிந்தனையுடன் இருந்து கொண்டிருந்தாள். சிவபெருமானும், சதியை நினைத்து கலங்கி கொண்டே இருந்த தருணங்களில் சதியின் மறு உருவம் அதாவது சதியின் மறுபிறவியை அறிந்து கொண்டதும் உமையவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.