ருக்மிணி தேவி அருண்டேல்
வாழ்க்கை வரலாறு
ருக்மிணி தேவி அருண்டேல் மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.
ருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். ருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். ருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.
1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னி பெஸண்ட் அழைத்தார். அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, ருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், ருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.
நாட்டியம் ருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது.
அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு ருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.
ருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்.
