மூன்றாவது கனவானின் கதை
கோவேறுக் கழுதையுடன் வந்தவர், பூதத்தை முதலில் வணங்கிய பின்னர் அந்தப் பூதத்திடன் தனது கதையை இவ்வாறு கூறத் தொடங்கினார்.
"அன்புக்கு கட்டுப்படும் நல்ல உள்ளம் கொண்ட பூதமே, இங்கு கோவேறு கழுதையாக இருப்பவள் வேறு யாரும் இல்லை, எனது மனைவி தான்" என்று கூறினார்.
"கொஞ்சம் விளக்கமாக அந்தக் கதையைக் கூறு" என்றது பூதம்.
உடனே மூன்றாவது கனவான் மேலும் தொடர்ந்தார்.
"வாணிப விஷயமாய் நான் வெளிநாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு இருந்தேன். ஏறக் குறைய இரண்டு ஆண்டுகளாக நான் ஊரிலேயே இல்லாமல் இருந்தேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து என்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு எனது மனைவியின் முன்னாள் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் போய் நிற்க வேண்டும் என்று ஆவலுடன் விரைந்து வீடு திரும்பினேன். ஆனால் அவளோ எனக்கு ஒரு பேர் அதிர்ச்சியைத் தரக் காத்துக் கொண்டு இருந்தாள். அது அங்கு போக விட்டுத் தான் எனக்கே தெரிந்தது. மேலும் அப்போது தான் அவள் எவ்வளவு கீழ் தரமானவள் என்பதை நானும் புரிந்து கொண்டேன். ஆம்! எனது மனைவி ஒரு கருப்பு நிற அடிமையை மார்புடன், மார்பாகத் தழுவி இதழோடு, இதழ் சேர்த்து அவனை நன்கு அனுபவித்துக் கொண்டு இருந்தாள். அதனைக் கண்ட நான் ஒரு கணம் திகைத்துத் தான் போனேன். எனது அன்பு மனைவியா இப்படி நடந்து கொண்டு இருக்கிறாள் என்பதை நான் உணர்ந்த சமயம். திடீர் என்று நான் அங்கு நிற்பதைக் கண்ட எனது மனைவி எழுந்தாள். அரை குறை ஆடையுடன் இருந்த அவள் ஒரு கூஜாவில் இருந்த தண்ணீரை என் மீது தெளித்தாள். அடுத்த நிமிடம் நான் நாயாகி விட்டேன். அவளோ மீண்டும் அந்தக் கருப்பு நிற அடிமையுடன் உல்லாசத்தில் மூழ்கினாள். அப்போது நான் கண்ணீருடன் அவ்விடத்தில் நிற்பதைக் கண்ட அவள் என்னை அடித்து ரத்தம் வடிய, வடிய துரத்தி விட்டாள்.
நாயாக மாறிய நான் குறைத்துக் கொண்டே ஓடினேன். இறுதியில் ஒரு இறைச்சிக் கடைக்காரரின் வாசலை அடைந்தேன். அவர் மிகவும் நல்ல மனம் படைத்தவராக இருந்தார். எனக்கு சாப்பிட பல வகையான இறைச்சிகளையும், பதார்த்தங்களையும் அளித்தார். அவர் கடையைப் பூட்டி விட்டு வீடு சென்றவுடன் நானும் உடன் அவர் பின்னாலேயே அவர் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டேன். அவர் அந்த வீட்டிலேயே என்னைக் கட்டி வைத்து நல்ல முறையில் பராமரித்து வந்தார்.
நானும் எனது பழைய வாழ்க்கையை மறந்து இறைவன் விட்ட வழி என்றபடி அந்த நாய் வாழ்க்கையை வாழப் பழகிவிட்டேன்.
அப்படி இருக்கும் சமயத்தில் தான், ஒரு நாள் வெளியூரில் இருந்து அவரது மகள் சொந்த ஊர் திரும்பி ஆவலுடன் அந்த இறைச்சிக் கடைக் காரரை "அப்பா" என்று அழைத்த படி அவ்விடம் வந்தாள். அப்போது நான் வீட்டு வாசலில் கட்டப் பட்டு இருப்பதைக் கண்டாள். கண்ட மாத்திரத்தில் அலறினாள். அதைக் கேட்டு அந்த இறைச்சிக் கடைக்காரர் ஓடி வந்தார். மகளிடம் விசாரித்தார். அவளும் தான் அலறிய காரணத்தை இறைச்சிக் கடைக்காரரிடம் சொல்லத் தொடங்கினாள்.
"அப்பா, உண்மையில் இது நாயே அல்ல, இவர் ஒரு ஆண் மகன். இவருடைய மனைவியால் தான் இவ்விதம் நாயுருவாக மாற்றப்பாட்டார்" என்றாள்.
தனது மகள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இறைச்சிக் கடைக்காரர் ஆச்சர்யம் கொண்டார். உடனே தனது மகளிடம்," எனில், எனது அன்பு மகளே, நீ தான் பல மந்திரங்களைக் கற்றவள் ஆயிற்றே! அதனால் இவரை மறுபடியும் ஒரு ஆண் மகனாக மாற்றக் கூடாதா?" என்று கேட்டார்.
"முடியும் அப்பா. அது எனக்கு ஒன்றும் ஒரு பெரிய காரியம் இல்லை. உடனே நான் இவரைப் பழைய படி மாற்றி விடுகிறேன்" என்று கூறி ஒரு குவளையில் இருந்து மந்திர நீரை எடுத்து அதனை நாயாக இருந்த என் மீது தெளித்தாள். அடுத்த கணம் நானும் பழைபடி ஆண் மகனாக மாறிவிட்டேன். உடனே அதுவரையில் எனக்கு ஆதரவு தந்த அந்த இறைச்சிக் கடைக்காரருக்கு நன்றிகளைத் தெரிவித்தேன். மேலும் என்னை பழைய நிலைக்கு மாற்றிய அவரது மகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தேன்.
பிறகு மீண்டும் எனது மனைவி என்னைப் பார்த்தால் வேறு ஏதேனும் ரூபத்துக்கு மாற்றி விடுவாளோ என்று அச்சம் கொண்ட நான். அந்த இறைச்சிக் கடைக்காரரின் மகளிடம்," அம்மா, என்னை நாயுருவாக மாற்றினாளே எனது மனைவி, அவளையும் உருவ மாற்றம் செய்ய விரும்புகிறேன், காரணம் மீண்டும் அவள் என்னை வேறு ஒரு ரூபத்துக்கு மாற்றி விட்டாள் எனக்குத் தான் பிரச்சனை. அதனால் நீங்கள் தானம்மா எனக்கு உதவிட வேண்டும்" என்று மன்றாடினேன்.
உடனே என் மீது பரிதாபம் கொண்ட அந்தப் பெண் மந்திர நீரைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, "இந்த நீரை உங்கள் மனைவி மீது தெளித்து என்ன உருவில் நீங்கள் அவளைக் காண வேண்டுமோ அந்த உருவத்தை மனதினில் எண்ணிக் கொள்ளுங்கள்" என்று கூறினாள்.
உடனே நானும் அந்த மந்திர நீரை எடுத்துக் கொண்டு விரைவாக எனது வீட்டிற்குச் சென்றேன். என்னை நாயாக உருமாற்றிய அந்தக் கிராதகி - அதாவது எனது மனைவி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அந்நிலையிலேயே, அந்த இறைச்சிக் கடைக்காரரின் மகள் கொடுத்த மந்திர நீரைக் கொண்டு எனது மனைவி கோவேறு கழுதையாக மாற வேண்டும் என்று நினைத்தபடி அவள் மீது தெளித்தேன். என்னுடைய எண்ணம் போலவே, எனக்குத் துரோகம் செய்த எனது மனைவி கோவேறுக் கழுதையாக மாறிவிட்டாள். அவளைத் தான் இப்போது நான் கயிற்றில் கட்டி இழுத்து வந்து உள்ளேன்" என்று அவர் கூறி முடித்தார்.
மூன்றாவது கனவான் கூறிய கதையைக் கேட்ட பூதம், "இந்தக் கதையும் நன்றாகத் தான் உள்ளது" என்று கூறியபடி அந்த வணிகனை முழுமையாக மன்னித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தது. அதன் படியே அந்த வணிகனிடம்," எனக்கு மனிதர்களே பிடிக்காது. அதனால் தான் நீ என்னிடத்துக்கு வந்தவுடன் எனது பிள்ளையைக் கொன்று விட்டதாகப் பொய் காரணம் கூறி உன்னைக் கொல்லத் தீர்மானித்தேன். ஆனால், இப்போதோ எல்லா மனிதர்களும் சுயநலக் காரர்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன் அதனால் உன்னை நான் மன்னிக்கிறேன்" என்று கூறி மன்னித்து விட்டு விட்டது.
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த நல்லவர்கள் மூவரையும் கட்டித் தழுவித் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் அந்த வணிகர்.
இவ்விதம் கதையை அரசர் ஷாரியாரிடம் சொல்லி முடித்தாள் ஷாரஜாத், அதைக் கேட்ட மன்னர் அவளை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன் ஷாரஜாத்தின் தங்கை துன்யாஜாத்தும் அந்தக் கதையை கேட்டு அக்காவைப் பாராட்டி மகிழ்ந்தாள்.
அப்போது ஷராஜாத் அரசரிடம், "இந்தக் கதையை விடவும் செம்படவனுடைய கதை இன்னும் பிரமாதமானதாகும்" என்று கூறினாள். உடனே அதையும் கேட்க ஆவல் கொண்டார் மன்னர் ஷாரியர்.
உடனே செம்படவனின் கதையை சொல்லத் தொடங்கினாள் ஷாரஜாத்
