முற்காலச் சோழர்கள்
முற்காலச் சோழர்கள் வரலாற்றில் புகழ் பெற்று விளங்கியவன் கரிகால் சோழன். கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.
புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.
