முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி
கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி 'களப்பாளர்' அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.
