முதல் அத்யாயம்
(நான்கு குலங்கள் மற்றும் அக்குலத்துக்குத் தரப்பட்டு இருக்கும் கடமைகள், வாழ்வின் நான்கு நிலைகள் , தர்மத்தைக் கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் )
நான்கு குலங்கள்
ஒரு சமூகமானது, குலத்தால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளைக் கொண்டது என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. இதில் எந்தக் குலமும், தாழ்ந்தது எனக் கூறமுடியாது, என அது மேலும் தெரிவிக்கிறது. மனித உடலில் அங்கங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ , அது போல மேற்கண்ட குலங்கள், நான்கும் சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை . அந்த, அந்தக் குலங்களுக்கு என்று சமூகம் ஒரு, ஒரு பொறுப்புகளைத் தந்து உள்ளது. அவைகள் பின்வருமாறு.
பிராமணர்கள்: இவர்களுக்கு கற்றல், கற்பித்தல், மதச் சடங்குகளை செய்தல்,அது மட்டும் இல்லாமல், நெருக்கடியான நேரங்களில் அரசர்களுக்கு ஆலோசனை கொடுத்தல் போன்ற பொறுப்புகள் தரப்பட்டு உள்ளதாக அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.
சத்திரியர்கள் :ஆயுதம் ஏந்தி , நாட்டை எதிரிகளிடம் இருந்து காத்தல், அதற்குத் தேவைப்பட்டால் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொடுத்தல் போன்றவை சத்திரியர்களின் கடமைகள் என அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது .
வைசியர்கள் : வாணிபம் செய்தல், பொருள் சேர்த்தல், கால்நடை மேய்த்தல். மற்றும் சமூகத்தைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல் போன்றவை வைசியர்களின் கடமைகளாக அர்த்தசாஸ்திரம் விவரிக்கிறது.
சூத்திரர்கள் : வேளாண்மை, கால் நடை மேய்த்தல் , கைவினைஞர்கள் , பாடுதல், நடித்தல் , மேலும் பல கலைத் தொழில்களை செய்யும் குலமாக இந்த சூத்திரர்களை அர்த்தசாஸ்திரம் விவரிக்கிறது .
பிராமணர்கள் வெள்ளை நிற உடையையும் , சத்திரியர்கள் சிவப்பு நிற உடையையும், வைசியர்கள் மஞ்சள் நிற உடையையும், சூத்திரர்கள் கருப்பு நிற உடையும் அக்காலத்தில் அணிவது வழக்கம். இதுவே வர்ணாஸ்ரமம் என அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு குலங்களும் சமூகத்துக்கு இன்றி அமையாதவை எனவும் அது மேலும் தெரிவிக்கிறது .
வாழ்வின் நான்கு நிலைகள்
அர்த்தசாஸ்திரம் கூறுகிறது , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் அவசியம் நான்கு நிலைகளைக் கடந்தே தீரவேண்டும். அதுவே , மானுட விதி என்று. அவை முறையே பிரம்மசார்யம், கிரஹஸ்தன் ( அல்லது குடும்பஸ்த்தன்) , வனப்ரஸ்த்தம் (எனப்படும் துறவுக்கு முந்திய நிலை அல்லது துரவரத்துக்காகத் தன்னை தயார்படுத்திக் கொள்ளுதல்), துறவு நிலை (என்று அழைக்கப்படும் சந்நியாசி நிலை) ஆகும்.
1.பிரம்மசார்யம் : சமய நூல்களைக் கற்றல், சமயச் சடங்குகளுக்காக யாகம் செய்தல், புனித நீராடுதல், எவ்வித உடைமைகலுமின்றி வாழுதல், தன்னையே ஆசிரியருக்கும் மற்ற குருமார்களுக்கும் அர்ப்பணித்தல். சக, மாணவர்களுடன் வெறுப்பு, விருப்பு கடந்த நிலையில் பழகுதல் போன்றவை அர்த்தசாஸ்திரம் கூறும் ஒரு பிரம்மச்சாரியின் கடமைகள் ஆகும் .
2.கிரஹஸ்தன் ( அல்லது குடும்பஸ்த்தன்) : தனக்குரிய தொழில் புரிந்து சம்பாதித்தல் , ஒரே கோத்திரம் அல்லாத , ஆனால் அதே குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணப்பது, கடவுளை மட்டும் இன்றி முன்னோர்களையும் விருந்தினர்களையும் வணங்குவது , தன்னை சார்ந்தவர்களுக்காகத் தனது சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாகம் செய்தல் போன்றவை அர்த்தசாஸ்திரம் கூறும் கிரஹஸ்தனின் கடமைகள் ஆகும்.
3.வனப்ரஸ்த்தம் (எனப்படும் துறவுக்கு முந்திய நிலை அல்லது துரவரத்துக்காகத் தன்னை தயார்படுத்திக் கொள்ளுதல்) : வெற்றுத் தரையில் உறங்குதல், புனித நீராடி யாகம் செய்தல், பிறரைச் சார்ந்தோ, தான தர்மத்திலோ வாழாமல் காட்டில் இருந்து சேகரித்தப் பொருட்களைக் கொண்டு வாழ்தல் போன்றவை ஒரு வனப்ரஸ்த்தியின் கடமைகள் என அர்த்தசாஸ்த்திரம் கூறுகிறது .
4. துறவு நிலை : முற்றிலும் புலன்களை அடக்குதல், அனைத்து உடைமைகளையும் துறத்தல் , உலக பந்தங்களைத் துறத்தல், ஒரே இடத்தில் தங்காமல் பல இடங்களுக்குச் செல்லுதல், உள்ளத் தூய்மையுடன் இருத்தல் ,எப்பொழுதும் தெய்வத்தின் தன்மையை தன்னகத்துள் உணர்ந்து இருத்தல் போன்றவை ஒரு துறவு நிலையில் இருப்பவனின் கடமைகளாக அர்த்தசாஸ்திரம் விளக்கிக் கூறுகிறது.
இது தவிர அனைவருக்கும் பொதுவான கடமைகள் இருப்பதாகக் கூறுகிறது அர்த்தசாஸ்திரம் அவை அகிம்சை, உண்மை, தூய்மை, தீய எண்ணங்களில் இருந்து விடுபடுதல், இறக்கம் மற்றும் சகிப்புத் தன்மை போன்றவை ஆகும்.
தர்மத்தைக் கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ஒருவர் தனது சொந்த குலத்துக்குரிய , மதத்துக்குரிய தர்மத்தைக் கடைபிடித்தல் மிக அவசியம் ஆகும்.அவ்வாறு கடைபிடிக்கும் பொழுது அவனுடைய தர்மமானது சொர்கத்திற்கும் , முடிவற்ற ஆனந்தத்துக்கும் அவனை அழைத்துச் செல்லும். ஆனால் அறம் அல்லது தர்மத்தை மீறுவதால் ஏற்படும் குழப்பம் உலகையே பூண்டோடு அழித்துவிடும். தனது குலத்துக்குரிய நியதிகளைக் கடைபிடிப்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை அனுபவிப்பான். வேதங்களைப் பின்பற்றி நிர்வகிக்கப்படுகிற எவ்வுலகமும் செழித்து வளருமே அன்றி அழிவதில்லை . எனவே, ஓர் அரசன் தனது குடிமக்களை தர்ம நெறியில் இருந்து வழி தவற அனுமத்திக்கக் கூடாது என்றெல்லாம் அர்த்தசாஸ்திரம் எடுத்துரைக்கிறது .
