முடிவுரை.
இதுகாறும் ஒன்பது உபந்நியாஸங்களிலும் யாங் கூறி வந்த விஷயங்களைத் தவிர்த்து அவ் வுபந்நியாசத் தலைப் பெயர்களொடு பொருந்தாது, எஞ்சிய சில விஷயங்களைப்பற்றி இவ் வுபந்நியாசத்திற் கூறித் தமிழ்மொழியின் வரலாற்றிற்கும் ஓராற்றான் முடிவுரை கூறுவாம்.
யாங் கூறும் இம்முடிவரை 'தமிழ்மொழியின் வரலாறு' என்ற விந்நூலிற்கே யன்றித் தமிழ்மொழியின் வரலாற்றிகன்றெனவுணர்க. தமிழ் மொழி வளர்ந்து முதிர்ந்துகொண்டே செல்லும் பாஷையாம். ஆதலால் இந்நூலும் முடிந்த நூலன்றென்பது தேற்றம். இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கேற்ப வளரவேண்டுவது.
இக்காலத்தில் ஆங்கில பாஷைகற்ற தமிழ்மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்கவேண்டுவது ஆவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றன வென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ்கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமும மற்றவர் கூற்றாம். இவ்விரண்டும் மிக்க ஆங்கிலர் இவ்விரண்டும் அற்றவர்களை எவ்வாறு மதிப்பாரோ? ஆங்கிலம் முதலிய பிறபாஷைக்குரியராய் அப்பாஷைகள் வல்லுநரெல்லாம் தமிழ்மொழியின்மீ தார்வமுடையாரைய்த் தமிழைக் கற்றும் தமிழ்நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழிபெயர்த்துக் கொள்ளுதலை உற்று நோக்கி யாதல் தமிழ்க் கல்வி அவசியமன்று என்பார்க்குப் புத்திவரட்டும்.
பாஷையறிவு பிறிதொரு பயனுக்குக் கருவியாகுமே யன்றி, அதுதானே பயனாகாது. பாஷையறிவே பயனெனக் கருதி அதன்கண் இன்பங் காண்பாருமுளர். சபைகளிலாவது சம்பாஷணைகளிலாவது சாதுரியமாகப் பேசுவோர் பாஷையறிவுடையோரே யன்றிச் சாஸதிரக் கல்வியுடையாரல்லர். சாஸ்திரக் கல்வியுடையார் எங்கே போனாலுந் தங்கள் கடையை விரிக்கப் புகுவாரேயன்றி வேறன்று. சாஸ்திரக் கல்வியுடையார்க்குப் பாஷையறிவும் இன்றியமையாததே. தங்கள் கருத்துக்களால் உலகமனைத்திலும் இன்பவுணர்ச்சி யெழுப்ப வல்ல நல்லிசைப் புலவர்கள் செய்த பாமுறைகளைப் படித்தலாலுண்டாகும் பயன் அளவிடற்பாலதன்று; மக்களிடத்தி்ல் அடங்கிக் கிடக்கும் மநோ விகாரங்களை எழுப்பிச் சுவை பயக்கும்.
இனி யிது நிற்க. தமிழ்நாட்டில் ஆங்கில வரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன்வழி மொழிகளாகிய தெலுங்கு கன்னட மலையாளதுளுவங்களோடு அடக்கி 'உண்ணாட்டுமொழிகள்' என வகைப்படுத்தனர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப் படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரியமொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம். இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவு படுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்கவேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ்மொழியாளர்.
வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ்மொழியும் 'உயர்தனிச் செம்மொழி' யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பன்மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கவே தகவுடைமையுமுள்ள மொழியே 'உயர்மொழி'. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்து தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற்பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே 'தனிமொழி' எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியி னுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடற்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய நூற்புலவர்கள் பலர்க்கும் ஓப்பமுடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது?
திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் 'செம்மொழி'யாம் என்பது இலக்கணம், இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதி னுணரவல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்க ளேற்படுமிடத்துப் பிறபாஷைச் சொற்களன்றித் தன்சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம்,. ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி யென்பது திண்ணம். இது பற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ்மொழி 'செந்தமிழ்' என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் 'உயர்தனிச் செம்மொழி'யேயாம் என்பது நிச்சயம். இவ்வள வுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்.
பல்லாண்டுகளின் முன்னர்ச் சென்னைமா நகரிலே, ஆங்கில வரசாட்சியின் பயனாக,'பள்ளிக்கூடப்பாட நூற்சபை' என்ப தொன் றேற்பட்டுப் பல நற்றொழில்கள் செய்து வாராநின்றது. இச்சபையார் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்ற பாடநூல்கள் அமைத்தனர்; அவ்வளவில் நில்லாது அவர்கள் சமஸ்கிருத நாடகக் கதைகளையும் ஆங்கில நாடகக் கதைகளையும் தெளிவான தமிழ் வசன நடையிலெழுதி வெளியிட்டனர்; 'ஜந விநோதிநி' என்றதோர் அருமையான தமிழ்ப் பத்திரிகையை மாதந்தோறும் பிரசுரித்து ஏறக்குறைய இருபத்திரண்டு வருஷகாலம் நடாத்தினர். யாது காரணத்தினாலோ அதுநின்றுபட்டது? அப்பத்திரிகை நின்று பட்டமை தமிழர்களது துரதிர்ஷ்டமேயென்னலாம். மேற்கூறியவாறு நற்றொழில் புரிந்து வந்த அச்சபையானது இப்போது சில்லாண்டுகளாக இருக்குமிடந் தெரியாதவாறு தூங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் உயிருடனிருக்கின்ற தென வெண்ணுவதற்கு இடனுண்டு. ஏனெனில், இச்சபையார் சிற்சில சமயங்களில் தமிழின்கண் வெளிப்படும் நல்ல நூல்கள் சிலவற்றிற்கு நேர்ந்த பதிப்புச் செலவுகருதி அவ்வந் நூலாசிரியர்கட்குப் பொருளுதவி செய்கின்றனர். இச்சபை மீட்டுந் தலைக்கிளம்பி முன்போல ஊக்கமுற்றுப் பல நற்றொழில்கள் புரியிலும் புரியலாம். இது துயிலொழிந் தெழுக.
இவ்வாறு பள்ளிக்கூடப் பாடநூற் சபை துயில்வது கண்டு நன்மக்கள் சிலர் முற்புகுந்து, தமிழ் தெலுங்கு மலையாள கன்னட துளுவங்களாகிய அனைத்தையும் போற்றுவேமென எழுந்து 'திராவிட பாஷா சங்கம்' என்னும் பெயர் புனைந்து கொண்டு சின்னாள் உழைத்தனர். இவர்கள் சில ஆங்கில சாஸ்திரச் சொற்களை மேற்கூறிய பாஷைகளில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டனர். அதன்மேல் துயிற்பெருந் தேவி இச்சங்கத்தையும் பற்றிக் கொண்டனள். ஆகவே சென்னை திராவிட பாஷா சங்கமும் தூங்குவதாயிற்று. இஃது என்று எழுமோ? அறியேம். இதுவும் விரைவினெழுக.
இனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப்பேர்படைத் தொளிரும் மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் 'தமிழ்ச் சங்கம்' ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது. அதற்கு அங்கமாகப் 'பாண்டியன் புத்தகசாலை'யும் 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை'யும் ஏற்படுத்தப் பட்டுன. முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுன; அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன. பின்னதன் கட் கல்வி பயிலும் மாணாக்கர் பலர், நூல்களும் ஆடையு முணவும் சங்கத்தாருதவ, அவற்றைப் பெற்றுப் படிக்கின்றனர்.இச்சங்கத்திற்கு அவயவிகளாக ஏறக்குறைய ஐம்பதின்மர் புலவர் இருக்கின்றனர். இவர்களெல்லாம் வருஷம் ஒருமுறை கூடுகின்றனர்; கூடித் தமிழ்மொழி முன்னுக்கு வருதற்குரிய யோசனைகள் செய்கின்றனர். சங்கத்திற்கெனத் தனியே ஓர் அச்சியந்திர சாலை ஏற்படுத்தப்பட்டுளது. அதன் மூலமாகப் பல அரிய தமிழ் நூல்களைச் சங்கத்தார் அச்சிடப்போகின்றனர். 'செந்தமிழ்' என்னுந் தலைப்பெயரிட்டு ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை நடாத்தி வருகின்றனர். அதன் கண்ணே பல அருமையான விஷயங்கள் வெளிப்படுகின்றன. சங்கத்தார் ஆங்கிலக் கலாசாலைகளிற் கற்கும் மாணாக்கர்க்குத் தமிழில் ஆர்வமுண்டாதல் வேண்டிப் பணப்பரிசிலும் யோக்கியதா பத்திரமும் வைத்துப் பரீட்சைகளேற்படுத்தி யிருக்கின்றனர். இவ்வாறு நல் வழிகளில் உழைத்து வரும் இம்மதுரைத் தமிழ்ச்சங்கம் நீடூழி நின்று உலவுவதாக.
ஆங்கிலக் கலாசாலைகளையொட்டி ஆங்காங்குத் தமிழ்ச் சங்கங்கள் பல தாபிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உதாரணமாகச் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையைச் சார்ந்து 'திராவிட பாஷாபி வர்த்தநி சங்கம்' என்பதும் சென்னை இராசதானிக் கலாசாலையைச்சார்ந்து 'தமிழ்ச்சங்கம்' என்பதும் நடைபெறுகின்றன. எனவே ஆங்கில வரசாட்சி தமிழ்மொழியின் முதிர்ச்சிக்குப் பல்லாற்றானும் உதவிசெய்து வருகின்றதென்பது யாவருமுணர்ந்த விஷயம்; மேற்கூறியவாறு பல சங்கங்கள் சேர்வதற்குக் கைகொடுத்தும் கடைக் கணித்தும் பரீக்ஷைப் பாட நூல்களுள் தமிழ் நூல்கள் பலவற்றை யேற்படுத்தியும் ஆங்கிலர் தமிழைப் போற்றுகின்றனர். அச்சியந்திரம் முதலியன அவர் கண்டுபிடித்துத் தந்துதவினர்; தமிழரது நாகரீக விருத்திக்குந் தனிப்பெருங் கருவியாய் இருக்கின்றனர். கையெழுத்து நூற்சாலையும் அமைத்திருக்கின்றனர். இவர்களது அரசு நீடூழி நிலைத்துத் தமிழ்மொழியை மேன்மேலும் வளர்ப்பதாக.
பாஷை திரிந்து வேறுபடுவதெல்லாம் தன்னியல்பாகவேயாம். ஒருவனாலுந் தான் விரும்பியபடி, தான்பேசும் பாஷையை மாற்றமுடியாது. மக்களறிவின்றியே பாஷை முதிர்ந்துகொண்டுசெல்லும்; பல்லாண்டுகள் கழிந்த பின்னரே முதிர்ச்சிக் குறிகள் தோன்றும். பாஷையினியல்பு இவ்வாறாக, இதனை யறியப் பெறாத வைத்தியநாத தேசிகர் நன்னூலாரது உட்கருத்தையும் உணராது,
"பழையனகழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே"
என்ற நன்னூற் சூத்திர விதியைப்,
"பழையனகழித்தலும் புதியன புகுத்தலும்
வழுவல கால வகையினானே"
என்று மாற்றித் தமது இலக்கணவிளக்கம் என்ற நூலின்கட் கூறினர்; எனவே தமிழ்ப் பாஷையின் ஒழுகலாற்றை மாற்றுதல் எவராலும் முடியாததாம். ஆதலால் தமிழ்ப் பாஷையின் ஒழுகலாறு இன்னதென்று உய்த்துணர்ந்துகொண்டு, ஆற்று வெள்ளத்தின் வேகத்துடன் செல்வான்போல, அவ்வொழுக லாற்றினை யொட்டி அதனோடியைந்து தமிழ்ப் புலவருந் தம் பாஷையைச் சீர் திருத்திக் கொள்ளவேண்டும்.
இனிச் சிலர் 'புதியன புகுதல் தமிழிற்கு ஒக்குமாயினும் பழையன கழிதல் ஒவ்வாது' என்ற கொள்கையுடையார்போலத் தாம் எழுதும் நூல்களின்கண் பழையன கழிந்த சொற்களிலும் சொல்லுருவங்களிலும் அளவிறந்தவற்றை வழங்குகின்றனர். இவர் செயல் தம்முடைய வல்லமை காட்டிப் படிப்போரை மருட்டித் தம்மைப் பற்றி அவரகள் நல்லெண்ணம் கொள்ள வேண்டுமென்று நினைத்துச் செய்ததாகக் கருதப்படும். படலால் இவர் தாம் எண்ணியபடி நன்கு மதிக்கற்பாடு பெறுவதில்லை. சாமானிய சனங்கள் இன்னார் நூல்களைத் தொடவும் அஞ்சுகின்றனர். மேலும் இங்ஙன-மெழுதுவார் சுவை போலிச்சுவை யெனப் பலரும் ஒதுக்குவர்.
'தமிழ்மொழியின் வரலாறு' எனத் தலைப்பெயரிட்டு எமது ஆராய்ச்சிக்கண் நேர்ந்த பல விஷயங்களையும் பத்து உபந்நியாசங்களிற் கூறி ஓராற்றான் முடித்தாம். தமிழ்மொழியும், தமிழ் மக்களும் நீடூழி வாழ்க.
கலி விருத்தம்.
ஐயர் வாழிய வண்ணலும் வாழிய
செய்ய நற்றமிழ் தேமெங்கு மோங்குக
துய்ய கோமகன் றோமின் றிலங்குக
தெய்ய யாமுரை செய்ந்நூ லொளிர்கவே.
தமிழ் மொழியின் வரலாறு முற்றிற்று.
