மிதிலைக் காட்சிப் படலம் - 717
இராமபிரான் பள்ளியெழுதல்
இராமன் துயில் நீங்கியபின் முனிவரோடும் தம்பியோடும்
சனகனது வேள்விச் சாலையைச் சார்தல்
717.
கொல் ஆழி நீத்து. அங்கு ஓர் குனி வயிரச்
சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்.
எல் ஆழித் தேர் இரவு இளங் கரத்தால்
அடி வருடி அனந்தல் தீர்ப்ப.
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய்
மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே. துயர் ஆழி
நெடுங் கடலுள் துயில்கின்றானே.
அங்கு - பாற்கடலில்; கொல் ஆழி - கொல்ல வல்ல சக்கரப்
படையை; நீத்து - நீக்கிவிட்டு; ஓர் குனி வயிரச்சிலை - வளைந்து
உறுதி வாய்ந்த ஒப்பற்ற கோதண்ட வில்லை; தடக் கைக் கொண்ட
- பெரிய கையிலே கொண்டு எழுந்தருளிய; கொண்டல் - மேக
நிறத்தவனான இராமன்; ஆயிரம் வாய் - ஆயிரம் முகங்களி
லும்; மணி விளக்கம் அழலும் - மாணிக்கமான விளக்குகள் ஒளி
செய்யப்பெற்ற; சேக்கை - (ஆதிசேடனாகிய) படுக்கையிலே; தொல்
ஆழி - பழமையான பாற் கடலில்; துயிலாது - தூங்காமல் (இருந்து);
துயர் ஆழி - (பாற்கடலில் பாம்பு அணையில் பள்ளிக் கொள்ளாமல்
இராமனாக அவதரித்து) (சீதையைச் சேராமல் உண்டாகிய)
மனத்துன்பமாகிய; நெடுங் கடலுள் - பெரிய கடலில்; துயில்கின்றான்
- மயங்கிக் கிடக்கின்றன; எல் ஆழித் தேர் - (அவனை) ஒளியுடைய
ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்ட; இரவி - சூரியன்; இளங்கரத்தால்
- மெல்லிய கைகளால்; அடி வருடி - (திருவடிகளை இனிதாகத்
தடவிக் கொடுத்து; அனந்தல் தீர்ப்ப - (அந்த இராமனின்) துயில்
மயக்கத்தைத் தீர்க்க (அதனால்); அல் ஆழிக் கரை - இரவாகிய
கடலின் எல்லையை; கண்டான் - பார்த்தான்.
பகலவன் உதித்து அவனுடைய கதிர்கள் வெளிப்பட்டு விளங்கிய
அளவில் இராமன் துயில் உணர்ந்தான். உயர்ந்தோரைத் துயில்
உணர்த்த வேண்டுபவர் தம் மெல்லிய கைகளால் அவர் திருவடிகளை
வருடித் துயில் எழுப்புதல். முறையாகும். அதனால் ‘இரவி
இளங்கரத்தால் அடிவருடி அனந்தல் தீர்ப்ப’ என்றார். கொண்டல் -
உவமையாகு பெயர். 154
