மிதிலைக் காட்சிப் படலம் - 712

bookmark

712.

வீசுகின்ற நிலாச்சுடர் வீழ்ந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும். சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.
 
ஈசன் ஆம் மதி- உயிருக்கு உயிரான  சந்திரன் என்னும் கணவன்;
ஏகலும்  -   தம்மைப்  பிரிந்து  போன   பின்பு;  ஆசை   மாதர்-
திசைகளாகிய   (அவனுடைய)   ஆசை    மனைவியர்;   பூசுவெள் -
(அக்கொழுநனால்   பூசப்பட்ட)    வெண்மையான;   கலவைப் புனை
சாந்தினை  -  கலவையாகிய   சந்தனக்  குழம்பை;    சோகத்தால்-
அவனைப்   பிரிந்த    துயரத்தால்;    அழித்தனர்    என்ன    -
அழித்துவிட்டவர்களைப் போல; வீசுகின்ற நிலாச்சுடர்   -  (சந்திரன்
மறைந்த   அளவில்)   முன்பு  (எல்லாத்  திசையிலும்)    பரவியிருந்த
அவனது ஒளியாகிய நிலா; வீந்தது - (ஒளி) ஒழிந்தது.   

ஆசை  மாதர்:  திசைகளாகிய   மனைவியர்;  காதலுடைய   மாதர்
எனவும் பொருள் தரும். தற்குறிப்பேற்றவணி.                   149