மிதிலைக் காட்சிப் படலம் - 711
சந்திரன் மறைதல் (711-712)
திங்களின் மறைவு
711.
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும். மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும். ஆழ்ந்தது - திங்களே.
கழிந்த - இறந்து போன; கங்குல் அரசன் - இரவாகிய அரசனது;
கதிர்க்குடை ஒளியுள்ள வெண்கொற்றக் குடையானது; விழுந்தது
என்னவும் - (கீழே) விழுந்தது போலவும்; மேல்திசையாள்- மேற்குத்
திசையான பெண்ணினுடைய; சுடர்க் கொழுந்து சேர் - இளமையான
ஒளி பொருந்திய; நுதல் கோது அறு சுட்டி - நெற்றியில்
அணிந்துள்ள குற்றமற்ற சுட்டி என்னும் அணியானது; போய்
அழிந்தது என்னவும் - கெட்டு அழிந்தது போலவும்; திங்கள் -
சந்திரன்; ஆழ்ந்தது - (மேற்கடலில்) மூழ்கியது.
வெண் கொற்றக்குடை வீழ்தல்: அரசன் ஒழிந்த நிலையையும்.
அவன் தேவியின் நெற்றிச்சுட்டி அழிந்தமை மேற்குத் திசை
அரசியின் துக்கக் குறி யையும் உணர்த்தும் என்பது குறிப்பு. தற்குறிப்பேற்றவணி. திலகம் இடாமை. நெற்றிச்சுட்டி அணியாமை
முதலியன கணவரை இழந்த பெண்களுக்கு உரியன. 148
