மிதிலைக் காட்சிப் படலம் - 707

bookmark

707.

‘வண்ண மேகலைத் தேர் ஒன்று. வாள் நெடுங்
கண் இரண்டு. கதிர் முலைதாம் இரண்டு.
உள்நி வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ?
 
எண்ணும்   - (நான் எப்பொழுதும்) நினைத்துக் கொண்டிருக்கின்ற;
கூற்றினுக்கு  - (கன்னியாகிய)  இயமனுக்கு;  வண்ணம்  மேகலை -
அழகிய   மேகலை  என்னும்  அணிகலன்  அணிந்த;  தேர்  ஒன்று
தேர்த்தட்டுப் போன்ற அல்குல் ஒன்றும்; வாள் நெடுங்கண் இரண்டு-
வாள்கள்   போன்ற  நீண்ட  கண்கள்  இரண்டும்; கதிர்முலை  தாம்
இரண்டு  -  பெருத்த  தனங்கள்  இரண்டும்;  உள்  நிவந்த நகை
- வாயிடமாக  அடங்கிப்  பொலிந்த  புன்சிரிப்பு;  என்ற ஒன்றும் -
என்ற ஒன்றும் உண்டு;  இத்தனை   வேண்டுமோ    -  (என்னைக்
கொல்லக்       கருதுகின்ற    கூற்றுவனுக்கு  இத்தனை  கருவிகளும்
வேண்டுமோ)  

சீதையின்     அல்குல்.  கண்.  முலை.  நகை  என்ற    இவற்றுள்
ஒவ்வொன்றும்  என்னை வருத்துகின்றன. ஆனால். இவற்றுள்   ஒன்றே
என்னை   வருத்தப்   போதுமே!  என்பது  கருத்து.    ‘பண்டறியேன்
கூற்றென்  பதனை இனியறிந்தேன். பெண்தகையால் பேரமர்க்  கட்டு’ -
குறள் 1083.தேர் - உவமையாகு பெயர்.                        144