மிதிலைக் காட்சிப் படலம் - 704
704.
வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள்.
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ- எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே?
வள்ளல் சேக்கை- வரையாது கொடுக்கும் தன்மை கொண்ட
(ஆதிசேடனை) படுக்கையாகக் கொண்ட; கரியவன் - கரிய நிறமுள்ள
திருமால்; வைகுறும் - பள்ளி கொள்ளும்; வெள்ளம் - வெள்ளமாகிய;
பாற்கடல்போல் - திருப்பாற்கடலைப்போல; மிளிர் - விளங்குகின்ற;
கண்ணினாள் கண்களையுடைய பெண்; எனது உள்ளத் தாமரையுள்
- என் இதயமாகிய தாமரையில்; உரைகின்றதால் - வசிக்கின்ற
காரணத்தால்; அள்ளல்பூமகல் - செந்தாமரை மலரில் (எப்போதும்)
வாழ்கின்ற திருமகள்; ஆகும் கொலோ - ஆவாளோ?
பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டருளும் திருமால்
- வெண்ணிறமுள்ள கண்ணின் கருநிறக் கண்மணியில் தோன்றும்
பாவை. திருமாலின் திருமேனி நிறச் சிறப்பால் கறுத்துத் தோன்றும்
சேடனாகிய பாம்பு - பாவையைத் தன்னுள்ளே கொண்டிருக்கும்
கருவிழி. பாற்கடல் வெள்ளம் - கருமணியைச் சூழ்ந்துள்ள
வெண்ணிறப் பரப்பு. 141
