மிதிலைக் காட்சிப் படலம் - 689

bookmark

மறுத்த மைந்தர்களைக் கோசிகன் சபித்தல்

689.

‘எழும் கதிரவனும் நாணச்
   சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய
   மயிர்ப்புறம் பொறியின் துள்ள.
அழுங்கல் இல் சிந்தையீர்! நீர்
   அடவிகள்தோறும் சென்றே.
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி.
   உறு துயர் உறுக!’ என்றான்.
 
எழும்     கதிரவனும் - உதிக்கும் சூரியனும்; நாண -  வெட்கம்
அடையும்படி;  இருகண்   சிவந்தனன்   -  (தன்னுடைய)  இரண்டு
கண்களும்  செந்நிறம்  டைந்து;  நெஞ்சம்  புழுங்கினன்  -  மனம்
தவித்தவனாய்;  வடவை  தீய  - வடவைத் தீயும் தீய்ந்து போகுமாறு;
மயிர்ப்புறம்  பொறியின் - எனது  உடம்பின் உரோமத் துவாரங்கள்;
துள்ள - தீப்பொறிகளை வெளியிட; அழுங்கல் இல் - (கோசிகன் தன்
மைந்தர்களைப்  பார்த்து) இரக்கம்  இல்லாத;  சிந்தையீர்  -  மனம்
உடையவர்களே!;  நீர் அடவிகள்தோறும் - நீங்கள் காடுகள் எங்கும்;
சென்று - திரிந்து; ஒழுங்கு அறு -நாகரிகம் இல்லாத; புளிஞர் ஆகி
- வேடர்களாய்; உறு துயர் உறுக  -  மிக்க துன்பத்தை அடைவீராக;
என்றான் - என்று சபித்தான்.   

கதிரவன்    நாணுதல்: கோசிகன் கண்களின் செந்நிறம் தனது கதிர்
மண்டலத்தில்   செந்நிறத்தைக்  காட்டிலும்  மிக்கிருத்தல்:   அவனது
கோபம்  தனது கதிர்களின் வெப்பத்தை விடக் கூடியிருத்தல். வடவை
- வடவாமுகாக்கினி.                                       126