மிதிலைக் காட்சிப் படலம் - 685
அம்பரீடன் சுனச்சேபனைப் பெற்றுக்கொண்டு
செல்லுகையில் உச்சிப்போதாதல்
சுனச்சேபனைப் பெற்ற அம்பரீடன் வழியில் கோசிகனைக் காணல்
685.
“கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று.
ஒற்கம்ஆம் விழுமம்குன்ற.
எடுத்துஎனை வளர்த்த தாதைக்கு”
என்று அவன்-தொழுது. வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி.
தடை இலாப் படர்தலோடும்.
சடர்க் கதிர்க் கடவுள் வானத்து
உச்சி அம் சூழல் புக்கான்.
எனை எடுத்து வளர்த்த -என்னை எடுத்து வளர்த்த; தாதைக்கு-
தந்தைக்கு (ரிசிகனுக்கு); ஒற்கம்ஆம் விழுமம் குன்ற - வறுமைத்
துன்பம் கெடும்படி; வேண்டிற்று வெறுக்கை - (அவன்) விரும்பும்
செல்வத்தை; கொடுத்து அருள் - (எனக்கு விலையாகக்)
கொடுத்தருள்க; என்று - என்று (அரசனை நோக்கிக்) கூறி; அவன
தொழுது - தந்தையை வணங்கி; வேந்தன் தடுப்பரும் -அரசனது
தடுக்க இயலாத; தேரின் ஏறி - இரதத்தின் மேல் ஏறிக் கொண்டு;
தடை இலாப் படாத்லோடும் - ஒரு தடையும் இல்லாமல் இருவரும்
செல்லுகையில்; சுடர்க் கதிர்க் கடவுள் - ஒளிவிடும் கதிர்களையுடைய
சூரியன்; வானத்து உச்சி - வானத்தின் நடுப்பகுதியாகிய; அம் சூழல்
புக்கான் - இடத்தை அடைந்தான்.
ஒற்கம்: வறுமையால் உண்டான தளர்ச்சி. தன்னை இதுவரை பேணி
வளர்த்த உதவிக்குக் கைம்மாறாகத் தன்னை விற்றுச் செல்வம்
பெறுமாறு வேண்டினான். தேரின் ஏறி: தேரின் ஏற. செயவென் எச்சம்
செய்தெனத் திரிந்தது. 122
