மிதிலைக் காட்சிப் படலம் - 681
தேவர்கள் கோசிகனைச் சாந்தப்படுத்தல்
681.
‘நறைத் தரு உடைய கோனும்.
நான்முகக் கடவுள்தானும்.
கறைத் தரு களனும். மற்றைக்
கடவுளர் பிறரும். தொக்கு.
“பொறுத்தருள். முனிவ! நின்னைப்
புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா
கணத்தொடும் அமைக. அன்னான்.
நறைத் தரு உடைய- மணமுள்ள கற்பகத் தருவையுடைய;
கோனும் - இந்திரனும்; நான்முகக் கடவுள்தானும் - நான்
முகனான பிரமனும்; கறைத் தருகளனும் - நஞ்சுக் கண்டமுடைய
உருத்திர மூர்த்தியும்; மற்றைக் கடவுளர் பிறரும் - மற்றத்
தேவர்களும். முனிவர்களும்; தொக்கு - ஒருங்கு கூடி; முனிவ -
(கௌசிகனை நோக்கி) முனிவனே; பொறுத்தருள் - (தேவர்கள்
உன்னை இகழ்ந்ததை) பொறுத்தருள்க; நின்னைப் புகல் புகுந்தவனை
- உன்னைச் சரணம் அடைந்தவனை; போற்றும் - கைவிடாது காக்கும்;
அறத்திறன் - தருமநெறி; நன்று - மிக நன்று; அன்னான் - அந்தத்
திரிசங்கு அரசன்; தாரா கணத்தொடும் - நட்சத்திரக் கூட்டத்தோடும்;
அமைக - பொருந்தி இருப்பானாக. 118
