மிதிலைக் காட்சிப் படலம் - 678
கோசிகன் திரிசங்குவைத் தன் தவமகிமையால்
வானத்து ஏற்றுதல்
678.
“அரைசன் இப் புலையற்கு என்னே
அனல்துறை முற்றி. எம்மை
விரைசுக வல்லை என்பான்!
விழுமிது!” என்று இகழ்ந்து நக்கார்.
புரைசை மா களிற்று வேந்தை.
“போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன். தவத்தின்” என்ன.
ஓங்கினன் விமானத்து உம்பர்.
(அழைக்கப்பட்ட தேவர்கள்) அரைசன் - விசுவாமித்திரன்; இப்
புலையற்கு - இந்தப் புலையனுக்காக; அனல் துறைமுற்றி - யாக
காரியத்தை நிறைவேற்றத் தொடங்கி; எம்மை - எங்களை; வல்லை
விரைசுக என்பான் - விரைவில் வருவீராக என்று அழைக்கின்றான்;
என்னே விழுமிது - மிக நன்று இச்செயல்; என்று இகழ்ந்து - என்று
நிந்தித்து; நக்கார் - ஏளனம் செய்து சிரித்தார்கள் - புரைசை
மாக்களிறு - (ஆயினும் கோசிகன் விடாமல்) கழுத்திலே கயிறு
கொண்ட யானைப்படையுடைய வேந்தை - அத் திரிசங்குவை நோக்கி
நீ துறக்கம் போய்ச் சேர்ந்திடுக; யானே தவத்தின் - நானே எனது
தவத்தால்; உரை செய்தேன் - கட்டளையிட்டுக் கூறுகிறேன்; என்ன-
என்று சொல்ல (அவ்வாறே திரிசங்கு); விமானத்து உம்பர் -(கிடைத்த
ஒரு) விமானத்தின் மேல்; ஓங்கினன் - ஏறி உயரச் சென்றான்.
கோசிகன் வெகுநேரமாக மந்திரங்களைச் சொல்லி அழைத்தும்
அவிர்ப் பாகத்தைப் பெறத் தேவர்கள் வாராமையால் பெருஞ்சினம்
கொண்டான்; ஓமம் செய்யும் அகப்பையை உயர எடுத்து. ‘யாகம்
இருக்கட்டும் என் தவத்தின் பயனால் இவ் வுடம்புடன் சுவர்க்கம்
செல்லுக. என்றான்; முனிவர் யாவரும் காணத் திரிசங்கு சுவர்க்கம்
சென்றான் என்பது. விழுமிது - இகழ்ச்சிக் குறிப்பு: எதிர் மறை
இலக்கணை. 115
