மிதிலைக் காட்சிப் படலம் - 677

bookmark

கோசிகன் வசிட்டன் மைந்தரைச் சபித்துவிட்டு
வேள்வி தொடங்கல்

677.

‘என்று உரைத்து. “யாங்கள் ஒல்லோம்”
   என்றனர்; என்னப் பொங்கி.
“புன்தொழில் கிராதர் ஆகிப்
   போக” எனப் புகறலோடும்.
அன்று அவர் எயினர் ஆகி.
   அடவிகள்தோறும் சென்றார்;
நின்ற வேள்வியையும் முற்றி..
   ‘நிராசனர் வருக!’ என்றான்.
 
என்று உரைத்து - என்று கூறி; யாங்கள் ஒல்லோம் - ‘நாங்கள்
இச்செயலுக்கு உடன்படமாட்டோம்’; என்றனர் - என்று சொன்னார்கள்;
என்ன -  என்று  கூற  (அதனைக்  கேட்ட  கௌசிகன்); பொங்கி -
கொதிப்பு அடைந்து; புன்தொழில்  கிராதர் - (அவர்களைக் குறித்து)
இழிந்த செயல்புரியும்  வேடர்கள்;  ஆகிப்போக என  - ஆகிவிடக்
கடவீர்கள் என்று; புகறலோடும் - சாபமொழி கூறிய அளவில்; அன்று
-  அப்பொழுதே; அவர் - அவர்கள்; எயினர் ஆகி - வேடர்களாகி;
அடவிகள்    தோறும்   -    காடுகள்  தோறும்;   சென்றார்  -
போய்விட்டார்கள்;  நின்று  -  (கோசிகனோ)  தொடங்கிய  செயலில்
சிறிதும் சலியாமல் நிலைநின்று; வேள்வியையும் முற்றி - வேள்வியை
முடிக்கத்  தொடங்கி;  நிராசனர் வருக  -  (ஆகுதியை  உண்ணுதற்
பொருட்டு)  தேவர்களே!  நீவிர் வருவீர்களாக!;  என்றான்  - என்று
அவர்களை அழைத்தான்.
 
    நிராசனர்: தேவர். உணவை வேண்டாதவர் என்பது பொருள்.  114