மிதிலைக் காட்சிப் படலம் - 592
592.
மலர்மேல்நின்று இம் மங்கை இவ்
வையத்திடை வைக.
பல காலும் தம் மெய் நனி
வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ?
நல் அறமேயோ?
உலகோ? வானோ? உம்பர்கொலோ?
ஈது உணரேமால்!
இம் மங்கை - இத் தன்மையைச் சீதையானவள்; மலர்மேல்
நின்று - செந்தாமரை மலர் மேலிருந்து (இறங்கி); இவ்வையத்திடை
வைக - இந்த மண்ணுலகில் தங்கியிருக்கும் பொருட்டு; பலகாலும்
- பல காலமாக; தம் மெய் நனி - தமது உடம்பு (விரதங்களால்)
மிகவும்; வாடும்படி - வாட்டம் அடையுமாறு; நோற்றார் -
அருந்தவம் புரிந்தவர்கள்; அலகு ஓவு இல்லா - எண்ணிக்கை
குறைவு இல்லாத; அந்தணரோ - அந்தணர்கள்தாமோ?; நல்
அறமேயோ - நல்ல தருமதேவதைதானோ?; உலகோ - இந்நிலவுலகு
தானோ?; வானோ - விண்ணுலகுதானோ?; உம்பர் கொலோ -
எல்லாத் தேவர்களுமோ? ; ஈது உணரேம் - இதன் உண்மையை
அறிகின்றோம் இல்லை.
சீதை இலங்கையில் சிறையிலிருந்து வானவர்க்கும் நிலவுலகில்
வாழும் அந்தணர் முதலோர்க்கும் பெருந்துன்பம் செய்து வந்த
இராவணன் முதலான அரக்கர்களை அழித்தும் பாவம் அகலவும்.
புண்ணியம் ஓங்கவும் செய்யப்போவதால் வேதியர் முதலோரால்
வருந்திச் செய்யப்பட்ட தவத்தின் பயனாலேதான் அச் சீதை
இப்பூமியில் வாழ்கிறாள் என்பது கருத்து. கொல் - அசைநிலை. 29
