மிதிலைக் காட்சிப் படலம் - 587

bookmark

கன்னிமாடத்துள்ள சீதாதேவியின் சிறப்பு (587-593)

587.

செப்பும்காலை. செங்கம
   லத்தோன் முதல் யாரும்.
எப் பெண்பாலும் கொண்டு
   உவமிப்போர் உவமிக்கும்.
அப் பெண் தானே ஆயின
   போது. இங்கு. அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை
   நாடி. உரை செய்வோம்?
 
செப்புங்காலை     -  (அச்சீதைக்கு  உவமை)  சொல்லுமிடத்து;
செங்கமலத்தோன் முதல் -  செந்தாமரை  மலரில்  வாழும் பிரமன்
முதலாக;  யாரும்  -  (எளிய மாந்தர் இறுதியாக) உள்ளவர் எவரும்;
எப்பெண்பாலும் கொண்டு - எந்தப் பெண்ணுக்கும் எண்ணத்தகுந்த
பகுதிகள்    எல்லாவற்றிலும்    ஒப்புப்   பொருளை    ஆராய்ந்து;
உவமிப்போர்  -  உவமிப்பவர்கள்;  உவமிக்கும்  - உவமானமாக
எடுத்துச் சொல்கிற; அப்பெண் தானே - (அப்பெண்களிலே  சிறந்த)
அத்திருமகளே;  ஆயின   போது -  (சீதையாக அந்த  இடத்திற்கு)
வந்துள்ளதால்; இங்கு - இந்த  இடத்தில்; அயல் வேறு  ஓர் ஒப்பு
- அத்திருமகளைவிட  வேறு   ஓர்  உவமைப்  பொருளை;  எங்கே
நாடி - எந்த இடத்திலே; எவ்வகை   கொண்டு   உரைசெய்வேம்
-  கண்டு  எவ்வாறு  எடுத்து உரைப்போம்?

சீதைக்கு     உவமை கூற இயலாது: ஏனென்றால் அவள் உவமை
கடந்தவள்.  எவ்வாறெனில்.  எல்லாப்  பெண்களுக்கும்  எல்லாராலும்
உவமையாக   எடுத்துச்   சொல்லப்படுகிறவள்   திருமகள்.  அவளே
இப்போது  மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க
அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?              24