மிதிலைக் காட்சிப் படலம் - 578

bookmark

மதுவருந்தி ஊடிய மகளிர் முகக்காட்சி

578.

பளிக்கு வள்ளத்து வாக்கும்
   பசு நறுந் தேறல் மாந்தி.
வெளிப்படு நகைய ஆகி.
   வெறியன மிழயற்றுகின்ற.
ஒளிப்பினும். ஒளிக்க ஒட்டா
   ஊடலை உணர்த்துமாபோல்.
களிப்பினை உணர்த்தும் செவ்விக்
   கமலங்கள் பலவும் கண்டார்.
 
பளிங்கு     வள்ளத்து- பளிங்குக் கிண்ணத்திலே; வாக்கும் -
ஊற்றப்படும்; பசு நறுந்தேறல் - புதிய மணமுள்ள தெளிந்த மதுவை;
மாந்தி - குடித்து;  வெளிப்படு   நகைய   ஆகி   -  அதனால்
வெளிப்படுகின்ற சிரிப்பை உடையனவாயும்; வெறியன மிழற்று கின்ற
- வெறியுணர்ச்சிகொண்ட வார்த்தைகளைப் பிதற்றுகின்ற; ஒளிப்பினும்
- மறைத்துவைக்க முயன்றாலும்; ஒளிக்க ஒட்டா - மறைக்க முடியாத;
ஊடலை உணர்த்துமாபோல் - ஊடலைப்புலப்படுத்தும் வகைபோல;
களிப்பினை  உணர்த்தும் - மதுக்  களிப்பை  வெளிப்படுத்துகின்ற;
செவ்விக் கமலங்கள் - அழகிய  செந்தாமரைப்  பூக்கள்;  பலவும்
கண்டார் - பலவற்றையும் கண்டார்கள்.

அணி:    உருவக உயர்வு நவிற்சியணி. மகளிர் முகங்கள் இங்குக்
கமலங்கள்  என்று உருவகிக்கப்பெற்றுள்ளன. கள் குடித்தவர் இயல்பு:
காரணமின்றிச்   சிரித்தல்.  வெறிகொண்ட  பேச்சுக்களைப்  பேசுதல்.
மறைத்து  வைக்கத்தக்க  பொருளை வெளிப்படுத்திச் சொல்லிவிடுதல்.
களிப்பு மிகுதல் ஆகியன.                                  15