மிதிலைக் காட்சிப் படலம் - 570

bookmark

570.
  
தாறு மாய் தறுகண் குன்றம்
   தட மத அருவி தாழ்ப்ப.
ஆறும் ஆய். கலின மா விலாழியால்
   அழிந்து. ஓர் ஆறு ஆய்.
சேறும் ஆய். தேர்கள் ஓடத்
   துகளும் ஆய். ஒன்றோடு ஒன்று
மாறு மாறு ஆகி. வாளா
   கிடக்கிலா மறுகில். சென்றார்.
 
தாறு     மாய் - (களிப்பு  மிகுதியால்) அங்குசத்தை முறிக்கின்ற;
தறுகண்   குன்றம்  - அஞ்சாமையுள்ள  மலைபோன்ற  யானைகள்;
தடமத  அருவி - மிக்க  மத  நீர்ப் பெருக்கை; தாழ்ப்ப - சொரிய
விடுவதால்;  ஆறும்  ஆய்  -  (கரிய) ஒரு நதி தோன்றி; கலினம்
மா விலாழியால்  - கடிவாளம் பூண்ட குதிரைகளின் வெண்மையான
வாய் நுரையால்; அழிந்து  -  அக்  கரிய  நிறம்  மாறி; ஓர் ஆறு
ஆய் - வேறொரு   வெண்ணிற   நதியாகி;   தேர்கள்   ஓட  -
இரதங்கள்  இடைவிடாமல்   ஓடித்  திரிவதால்; சேறும் ஆய் - (நீர்
சிறிது உலர்ந்து) சேறாகியும்; துகளும்  ஆய்  -  (மீண்டும்  தேர்கள்
ஓடுவதனால்) புழுதியாகவும்;   துகளும்  ஆய்  -(மீண்டும்  தேர்கள்
ஓடுவதனால்)  புழுதியாகவும் ஆகி; ஒன்றோடு  ஒன்று -  (இவ்வாறு
அடிக்கடி) ஒன்றோடு   ஒன்று;    மாறு   மாறாகி   -   பெரிதும்
மாறுபடும்  தன்மையுடையதாய்;   வாளா   கிடக்கிலா   -  (சிறிது
பொழுதும்)  ஒரே    தன்டையுடையதாக       இல்லாத;   மறுகில்
சென்றார்  -  பெருவீதியிலே (மூவரும்) போனார்கள்.   

கரிய ஆறும் வெள்ளாறும்: யானையின் மதநீரால் ஒரு கரிய ஆறு
தோன்றியது;  பின்னாக் குதிரையின் வாய்நுரை அதில் கலந்தமையால்
அக்கருநிறம்  சிறிது  மாறி  வெண்ணிற  நதியாயிற்று. மறுகு - தெரு:
தேர்கள்  இடை  உலர்ந்த அந்த இடம் புழுதியாக மாறிற்று. இவ்வாறு
மீண்டும் யானை முதலியன செல்லுவதால் மாறி மாறிக் கருநிற நதியும்;
வெண்ணிற நதியும் உண்டாகும் வீதி எனலாம்.                  6