மாலையிடல்:
சபரிமலை புனிதப் பயணம் என்பது உணர்ச்சிகளின் ஒரு சோதனைதான். மாலையிட்டு, மலை சவிட்டி, திரும்பி வரும்வரை பக்தர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும். இது ‘விரதம்’ என அறியப்படுகின்றது.
ஒரு பக்தன் எப்பொழுது மாலை இடுகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது. மலைப்பயணம் செய்து சுவாமியை தரிசிக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்துவதற்காகவே மாலை அணியப்படுகிறது. இதனை மாலையிடல் என்பர்.
பக்தர்கள் துளசிமாலை அணிவது வழக்கம். அதில் ஐயப்ப உருவம் பொறித்த ‘லாக்கெட்’ கோக்கப்பட்டிருக்கும். மாலை அணிந்துவிட்டால், பக்தர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.
புகை பிடித்தல், மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களைக் கட்டாயமாக விட்டுவிடவேண்டும். பக்தர்கள் இல்லற இன்பங்களிலிருந்தும் விடுபட்டிருக்கவேண்டும்.
பூஜைகள் செய்தபின் ஏதேனும் கோயில் பூஜாரியோ குருசுவாமியோ பக்தனுக்கு மாலை அணிவிப்பார். பதினெட்டு முறை புனித மலைப்பயணம் செய்து சுவாமி ஐயப்பனை தரிசித்தவர்கள் குருசுவாமி எனறியப்படுவர்.
பக்தர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்தும் மாலை அணியலாம்.
மலைப்பயணம் செய்து திரும்பி வந்தபின் மாலையைக் கழற்றலாம்.
