மார்கரெட் நோபிள் அவர்களுக்கு சுவாமிஜி எழுதிய பதில் கடிதம்
மார்கரெட் நோபிள் லண்டனில் சுவாமிஜியைக் குருவாக ஏற்றாள். சுவாமிஜி தாயகம் திரும்பும் போது அவருடன் மார்கரெட் நோபிள் உடன் வருவதாகக் கூறினாள்.
சுவாமிஜியோ, அவள் தன்னுடைய விருப்பத்தை நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்த பிறகு இந்தியாவுக்கு வரலாம் எனக் கூறிச் சென்றார். ஆனால், மார்கரெட் நோபிள், இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாள்.
சுவாமிஜி கல்கத்தாவில் மடம் ஒன்றைத் துவக்கியதை அறிந்து மகிழ்ந்தாள். மடத்தில் இருந்த துறவிகள் கல்கத்தா நகரில் பரவிய பிளேக் நோயை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்ததும், இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவளது எண்ணம் வலு அடைந்ததது.
மார்கரெட் நோபிள் சுவாமிஜிக்கு இது பற்றிக் கடிதம் எழுதினாள்.
சுவாமிஜி இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார். அதில் அவர், இந்தியாவில் என்னென்ன துன்பங்களை அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி விரிவாகவே குறிப்பிட்டு இருந்தார்.
"இந்தியப் பெண்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அவசியம் உன் போன்ற பெண்கள் வேண்டும். நீ அதற்குத் தகுந்தவள் தான், ஆயினும் இங்கே மக்கள் மூட நம்பிக்கைகள், அடிமைத் தனம் இவற்றில் தோய்ந்து இருக்கிறார்கள். பாதி நிர்வாணமாக இருக்கும் ஆடவர் பெண்டிரின் நடுவில் நீ வாழ வேண்டி இருக்கும். அத்துடன் கடுமையான வெயில் நிறைந்த பூமி இது. ஐரோப்பிய நாட்டு வசதிகளில் ஒன்றையும் நீ இங்கே எதிர்பார்க்க முடியாது. வெள்ளையர்களைக் கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில் நீ பணிவிடை செய்ய விரும்பினால் உன்னை வரவேற்கிறேன். எனக்கு இங்கே பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளாதே. சிறிதளவு மதிப்பு உண்டு அவ்வளவு தான். எனினும், நீ இங்கு வந்தாலும் வராவிட்டாலும் எனது உதவி உனக்கு உண்டு. யானையின் தந்தங்கள் வெளியே வருகின்றன. பிறகு உள்ளே செல்வதில்லை. அதுபோலத் தான் எனது வாக்குறுதியும்" என்று சுவாமிஜி அந்த பதில் கடிதத்தில் எழுதி இருந்தார்.
இவை எல்லாவற்றையும் படித்த பிறகு மார்கரெட் நோபிள் அவர்களின் ஆர்வம் அதிகரித்ததே தவிர, துளியும் குறையவில்லை.
