மந்தரை சூழ்ச்சிப் படலம் - 1502
1502.
‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.
‘அந்தணர் - வேதம் வல்ல வேதியர்; கரிய மாலினும் - கருநிற
உருவினனாயதிருமாலைக் காட்டிலும்; கண்ணுதலானினும் - நெற்றிக்
கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும்;உரிய தாமரைமேல்
உறைவானினும் - தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல்
வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்; விரியும் - பரந்து விளங்கும்;
ஓர் பூதம் ஐந்தினும்- ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்;
மெய்யினும் - சத்தியத்தைக் காட்டிலும்; பெரியர் - மேம்பட்டவர் ஆவர்;
(அவர்களை) உள்ளத்தால் - மனப்பூர்வமாக; பேணுதி - புறந்தருவாயாக.’
மும்மூர்த்திகள் - உலகிற்கு நிமித்த காரணர் - பஞ்சபூதம் உலகிற்கு
முதற் காரணம். அவற்றின் வேறுபடாதது உலகம். அதனால், பௌதிகம்
எனப்பெயர் பெறும். மெய் - உலகிற்கு அடிப்படையாகிய காரணமாயிருந்து
உலகு இயங்கத் துணைபுரிவது ஆதலின் துணைக்காரணம் எனவும் கூறலாம்-
இவை அனைத்தினும்அந்தணர் உயர்ந்தோர். முத்தேவர் உயர்ந்தவர்
என்பது அனைவரும் அறிந்தது; ஆகலின் அவரைவைத்து அந்தணர்
உயர்வை எடுத்துக் காட்டினர். ‘உரிய தாமரை’ பலர்க்கு உரியதாகாது
அவனுக்கேஉரிய தாமரை. அது திருவுந்தித் தாமரை, மெய்யினும் பெரியர்
எனவே அவர்க்கு மெய் இன்றியமையாததுஎன்பதாம். ‘உள்ளத்தால்’ - ஆல்
‘ஒடு’ என்ற உடனிகழ்ச்சிப் பொருளில் வந்துள்ளது. இவ்வுருபு இப்பொருளில்
வருவது இலக்கணத்தில் பழைய வழக்கு. பேணுதி - புறந்தருக. அஃதாவது
பின்னின்றுகாத்தல்; குழந்தையைத் தாய் காக்குமாறு போலக் காத்தலாம்.
வேதியர்க்கு இருந்த சமுதாயச் செல்வாக்கினைஉணர்க. இவ்வறவுரை
இப்படலத்து முப்பதாம் பாடலில் முடியும். 15
