மதுரகவி ஆழ்வார்

bookmark


மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798 க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். அதனால் சில வைணவர்கள் இவரை ஆழ்வாராக சேர்த்துக் கூற மறுக்கின்றனர் என்பதும் உண்மையே.

"மதுரகவி" என்ற அடைமொழியுடன் இந்த ஆழ்வார் அழைக்கப்படக் காரணம் :-

சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணத்தால் இவர் "மதுரகவி" என்று அழைக்கப்படுகிறார். சாமி சிதம்பரனார் என்ற தமிழ் அறிஞரின் கூற்றுப் படி இவர் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மதுரகவி ஆழ்வாரின் மேலும் சில சிறப்புகள் :-

மதுரகவி ஆழ்வார் தனது இளமைக் காலத்தில் வேத சாஸ்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.

அயோத்தியில் தங்கியிருந்த போது ஒரு நாளிரவில் வெளியே வந்த சமயத்தில்  தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காண வேண்டும்' என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி

                "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?"

என்று வினவினார்.

                "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"

என்று விடை வந்தது. இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே அதன் விடை.

மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறிய வேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாகக் கருதப்படுவதன் சிறப்பு:-

ஒம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஒம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்.

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த ஒரு பாசுரம் :-

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல் இதோ உங்களுக்காக:-

        " நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,

                மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;

        தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி

                பாவின் இன்னிசை பாடித்திரிவனே ".