மணிவண்ணன்
வாழ்க்கை வரலாறு
இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ‘24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர்.
பிறப்பு:
மணிவண்ணன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:
மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இல்லற வாழ்க்கை:
மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்க்கை:
மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
இறப்பு:
இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.
