பேயாழ்வார்
பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது. இவர் திருமாலின் கையில் இருக்கும் நந்தகம் என்னும் பெயர் கொண்ட வாளின் அம்சமாகக் கருதப்படுகிறார். இவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் எனக் கருதப்படுகிறார். இவர் பாடிய பாசுரங்களிலே இதற்குச் சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இதோ ஒரு பாசுரம் :
" தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து "
