பூக் கொய் படலம் - 993

bookmark

மனைவியர்க்கு மலரைக் கொடாது ஒரு
மன்னன் நிற்றல்

993.

ஊற்று ஆர் நறை நாள்மலர். மாதர்.
   ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக்
   கைகள் நீட்டி.
ஏற்றாரை நோக்கான். இடை ஏந்தினன்.
   நின்று ஒழிந்தான் -
மாற்றான். உதவான். கடு வச்சையன்
   போல் - ஒர் மன்னன்.
 
சேற்றால் விளையாத - சேற்றில் உதிக்காத; செந்தாமரைக் கைகள்
- செந்தாமரை மலரை  ஒத்த  கைகளை;  நீட்டி  ஏற்றார்  மாதர்  -
(கணவனாகிய அரசன்  பறித்துத்தர  மலர்கள் வேண்டும் என்று) நீட்டிக்
கேட்ட  மனைவிமார்க்கு;  ஒர்  மன்னன் - ஓர் அரசன்; நறை ஊற்று
ஆர்நாள்   மலர்   -  தேன்  சொட்டுகின்ற  நிறைந்த  அன்றலர்ந்த
மலர்களை;  உதவான்   -   கொடாதவனாய்;  இடை  ஏந்தினன்  -
(அவ்விருவர்க்கும்)   இடையே   (தானே)   ஏந்தினவனாய்;  மாற்றான்
உதவான் - (யார்க்கும்) மறுக்காமலும் கொடுக்காமலும்;  கடு வச்சையன்
போலல் - கொடிய உலோபியைப் போல; நின்று ஒழிந்தான் - எதுவும்
செய்ய இயலாமல் நின்று இருந்தான். 

ஓர்   மன்னன்  கைகள் நீட்டி ஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன்
நின்றொழிந்தான்  என்று  கூட்டுக. மாதர் ஒருங்கு ஏற்றார் என்பதனால்.
மாதர்  ஒருவர்  அல்லர்  என்பது   பெறப்பட்டது.   தன்  மனைவியர்
இருவரும்   ஒருசேரக்   கேட்டதனால்   சமமாகப்   பங்கிட்டுத்தரினும்
யார்க்கு  முதலில்  தந்தது  என்று   ஊடுவர்.  அதனால்.  மலர்களைக்
கொடுக்கவும்  மறுக்கவும்  மாட்டாமல்  கொடிய  உலோபியைப்  போல்
நின்றான்   என்றார்.   கொடாமல்   இருப்பது   உலோபம்.  கொடுக்க
மறாமலும்   நிற்பது   கொடும்   உலோபம்.   உடனே   மறுத்துவிடின்
இரப்போர்     வேறிடம்     நாடி    இரக்க     வாய்ப்பு    உண்டு;
அவ்வாய்ப்பினையும்    இழக்க    வைப்பதால்    “கடு   வச்சையின்”
என்றார்.                                                  19