பூக் கொய் படலம் - 982
ஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்
982.
அம்புயத்து அணங்கின் அன்னார்
அம் மலர்க் கைகள் தீண்ட.
வம்பு இயல் அலங்கல் பங்கி.
வாள் அரி மருளும் கோளார்-
தம் புய வரைகள் வந்து
தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல்.
கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ!
அம்புயத்து அணங்கின் அன்னார் - தாமரை மலரில் வாழும்
திருமகளைப் போன்ற (அழகிய) அம்மகளிரின்; அம்மலர்க்கைகள்
தீண்ட - அழகிய அம் மலர் அனைய கரங்கள் தீண்டியவுடன்;
வம்பியல் அலங்கல் பங்கி - மணம் பொருந்திய மாலைகளையணிந்த
மயிர்முடியினையும்; வாள் அரி மருளும் கோளார்தம் - வாள்
போன்று பாயும் கொடுமையினையுடைய சிங்கங்களும் அஞ்சும்
வலிமையினையும் உடைய ஆடவர்கள் தம்முடைய; புய வரைகள்
வந்து தாழ்வன - மலையனைய தோள்கள் அம்மகளிரின் முன் வந்து
தாழ்ந்து வணங்கி நிற்பன (என்றால்); தளிர்த்த மென்பூங்கொம்புகள் -
(மெல்லிய) தளிர்களையும் மெல்லிய பூக்களையும் உடைய
பூங்கொடிகள்; தாழும் என்றல் - அம் மகளிர் தீண்டியவுடன்
தாழ்கின்றன என்பது; கூறலாம் தகைமைத்து ஆமோ? - சிறப்பாக
எடுத்துக் கூறத்தக்கதோ?
‘மலர்க்கைகள் தீண்டப் புய வரைகள் தாழ்வன’ என்று. மலர்களின்
முன் மலைகள் வீழ்ந்து கிடக்கும் வியப்புக் கண்டு கூறியவாறு. மேற்
பாடலில் மகளிர்க்கு அஃறிணைகளே வணங்குகின்றன;
உயர்திணைகளைப்பற்றிக் கூறவேண்டுமோ என்றவர். இப்பாடலில்
உயர்திணைகளே வணங்குகையில் அஃறிணைகளைப்பற்றிக் கூற
வேண்டுமோ என மாற்றிக் கூறிச் சுவையூட்டினார். ஆகவே.
இருதிணை யுயிர்களும் மகளிரை வணங்கும் என்பது தெளிவாயிற்று. 8
