பூக் கொய் படலம் - 980

bookmark

குயில்களின் நாணம்

980.

பாசிழைப் பரவை அல்குல்.
   பண் தரு கிளவி. தண்தேன்
மூசிய கூந்தல். மாதர்
   மொய்த்த பேர் அமலை கேட்டு.
கூசின அல்ல; பேச
   நாணின. குயில்கள் எல்லாம் -
வாசகம் வல்லார் முன் நின்று.
   யாவர் வாய் திறக்க வல்லார்?
 
குயில்கள் எல்லாம் - அந்தச் சோலையில் உள்ள குயில்கள் யாவும்;
பாசிழைப்  பரவை  அல்குல்  - பசும்பொன்னால் அமைந்து மணிகள்
இழைத்து  இயற்றிய   அணிகள்  பூண்ட பரந்த அல்குலையும்; பண்தரு
கிளவி  -  இசையென்னுமாறு  வெளிப்படும்   இனிய   சொற்களையும்;
தண்தேன்  மூசிய  கூந்தல்  மாதர் - (சூடிய மலரிலிருந்து) குளிர்ந்த
தேன்  பரவிய  கூந்தலையும்  உடைய   பெண்டிரின்;  மொய்த்தபேர்
அமலை  கேட்டு  - நெருங்கிச் சூழ்ந்த பேரொலியைக் கேட்டு; கூசின
அல்ல  -  (புதியோரைக்  கண்ட)   கூச்சத்தால்  (வாய்மூடிக் கிடந்தன)
அல்ல;  பேச நாணின - (அந்த மகளிர்முன்  தமக்குற்ற  தாழ்வுணர்ச்சி
மேலீட்டால்)  பேசுதற்கு  வெட்கமுற்று (வாய்மூடிக்) கிடந்தன;  வாசகம்
வல்லார்  முன்நின்று - (இனிமையாகப்) பேச வல்லார் முன்னிலையில்;
யாவர்   வாய்   திறக்க வல்லார்? -  யாரே  வாய்  திறந்து  (பேச)
வல்லவர்கள்? 

புதியோர்     முன்பு    பேச    இயலாமை    கூச்சம்   எனவும்.
உயர்ந்தோர்முன்.  தன்  சிறுமையினால்  செயலிழந்து  பேச  இயலாமை
நாணம்  எனவும்  படும்.  “கருமத்தால்  நாணுதல்  நாணு” (திருக். 1012)
என்பார் வள்ளுவனாரும்.

சோலைக்குயில்கள்     வாய்மூடிக் கிடப்பதற்குப் புதியாரைக் கண்டு
இயல்பாய்  வரும்  கூச்சம்  காரணம்  அன்று; அம் மகளிரைப்போன்று
இனிமை  தோன்ற ஒலிக்க இயலாமற்  போன  செயலால் வரும் நாணம்
காரணம் என்பதாம். வேற்றுப்பொருள்வைப்பணி.                  6