பூக் கொய் படலம் - 1005
மறைந்து தேடி விளையாடுதல்
1005.
‘பொன்னே. தேனே. பூமகளே. காண்.
எனை’ என்னா.
தன் நேர் இல்லாள். அங்கு. ஒரு
கொய்யல் தழை மூழ்கி.
‘இன்னே என்னைக் காணுதி நீ’ என்று.
இகலி. தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து.
நகுவாளும்;
தன் நேர் இல்லாள் - தனக்கு ஒப்புச் சொல்ல இயலாத அழகி
ஒருத்தி; பொன்னே - பொன் போல் அருமை வாய்ந்தவளே!; தேனே
- தேன் போன்று இனிமையானவளே!; பூமகளே - திருமகள் போன்று
செல்வம் நிறைந்தவளே!; எனைக் காண் - நான் ஒளிந்து
கொள்ளுகிறேன் கண்டுபிடி; எனா - என்று (அவள் தோழியைப்
பார்த்து)ச் சொல்லி; அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி -
அச்சோலையில் உள்ள கொய்தற்குரிய மரத்தின் தழைகளுக்கிடையே
மறைந்து கொண்டு; நீ இன்னே என்னைக் காணுதி - இப்போது
என்னைக் கண்டுபிடி பார்க்கலாம்; என்று இகலி - என்று
விளையாட்டுப் பகையோடு; தன் நல் நீலக்கண் - தனது நல்ல
கருங்குவளை மலர் அனைய கண்களை; கையில் மறைத்து - (தன்)
கைகளால் மூடிக்கொண்டு; நகுவாளும் - சிரித்து மகிழ்வாளும்.
ஒளிந்து விளையாட விரும்பிய ஒருத்தி. தழையிடை மூழ்கி. தன்
கண்களை மூடிக்கொண்டு. ‘என்னைக் கண்டுபிடி பார்க்கலாம்’ என்று
குரல் கொடுத்தாள். குரல் வரும் வழிச் சென்று தோழி கண்டுபிடித்து
விடுவாள் என்று தெரியாத குழந்தைமை சுட்டியவாறு. கண்களைக்
கைகளால் மூடிக் கொள்ளும்போது. தனக்கு உலகம்
இருண்டிருப்பதைப் போலவே தோழிக்கும் இருண்டிருக்கும் என்று
நினைத்தாள் பேதை என்க . “பொன்னே. பூவே. பூமகளே” உவம ஆகு
பெயரில் வந்த விளிகள். என்னா: என்று; செய்யா எனும் வினை
எச்சம். கொய்யல்; கொய்யல் மரம். கொய்யா இன்றைய வழக்கு.
“கொங்கார் கோடலோடு கொய்யல் குழைஇ” (பெருங் 1 : 51 : 51)
என்பர் கொங்குவேளிரும். இன்னே: இப்பொழுதே. இகல்: பகை.
மாறுபாடு. நீலம்: நீலோற்பலம். கருங்குவளைப் பூ: நகுதல்: சிரித்தல். 31
