பூக் கொய் படலம் - 1002

bookmark

ஒரு பெண் ஒளிந்த கிளிக்காக ஒசிந்து வருந்தல்

1002.

வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும்
   வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ.
   கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி.
   பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க.
   குழைவாளும்;
 
வம்பின் பொங்கும் - கச்சுக்கு அடங்காது ததும்புகின்ற; கொங்கை
சுமக்கும்  வலி  இன்றி  - கொங்கைகளைச் சுமக்கின்ற வலிமையின்றி;
கம்பிக்கின்ற -  நடுங்குகின்ற; நுண் இடை நோவ - நுண்ணிய இடை
வருந்துதலால்;  கசிவாளும்  -  வருந்துவாள்  ஒருத்தியும்; பயில்கின்ற
கொம்பில்  -   நெருங்கியடர்ந்த   கொம்புகளினிடையே;  கிள்ளைப்
பிள்ளை  ஒளிக்க -  (தான் வளர்த்த) கிளிப்பிள்ளை ஒளிந்து கொள்ள;
பைம்பொன்    கிண்ணம்    -    பசும்பொன்னாற்   செய்யப்பெற்ற
கிண்ணத்தை; மெல்விரல் தாங்கி - மெல்லிய விரல்களில் தாங்கியவாறு;
குழைவாளும்   -   (அதற்கு   உணவூட்ட  இயலாமைக்கு)  வருந்தித்
தளர்வாள் ஒருத்தியும். 

பெண்மை    கட்புலன்  ஆவதோர்  மென்மைத்  தன்மையாவதால்.
அவர்தம்   உடல்   உள்ளம்   இரண்டின்    மென்மையும்   ஒருங்கு
சுட்டுகின்றார். “கம்பிக்கின்ற  நுண்ணிடை”  என்பனதால். பெண்மையின்
உடல   மென்மையும்.  “கிள்ளைப்   பிள்ளை   ஒளிக்கக்  குழைவாள்”
என்பதனால்.  உயிர்  ஓம்பும்  அன்பு   மயமான  உள்ள  மென்மையும்
சுட்டினார்.   பச்சைக்    கொடிகட்கிடையே   பச்சைக்   கிளிப்பிள்ளை
ஒளிந்து  கொண்டால்.  கண்டு கொள்வது அரிது ஆதலின் வருந்துவாள்
என்பாள்  “கிள்ளைப்பிள்ளை   ஒளிக்கக்  குழைவாள்”  என்றார். பைம்
பொற்கிண்ணம்  பெரிதாதலின்  அதனை நெடுநேரம்  தாங்கும்  தன்மை
அவள் மெல்லிய சிறுவிரல்கட்கு    இல்லை   என்பார்.   “மெல்விரல்
தாங்கி”  என்றார்.  வம்பு:  மார்புக்   கச்சு.   கம்பித்தல்:   நடுங்குதல்.
அசைதல்.  கசிதல்: அழுதல். வருந்துதல்.  குழைதல்: தளர்தல்.   கிளிக்
குஞ்சுகளைக்  கிளிப்பிள்ளை என்பது  மரபு.   “பார்ப்பும்   பிள்ளையும்
பறப்பவற்று   இளமை”    (தொல். மரபு. 4)   என்பது   தொல்காப்பிய
மரபியல்.                                                  28